நாயென்றும், கழுதையென்றும் “அவர் கோயபல்ஸின் (ஹிட்லர் அரசின் மந்திரி) கைச் சங்கிலியில் கட்டப்பட்டு வாலை குழைத்துக், கொண்டு ஏவலுக்கு பாயும் இழிவான நாய் ஜப்பான் சக்ரவர்த்தியின் அரசை உலகெங்கும் விஸ்தரிக்க பணிசெய்யும் கைக்கூலி. ஜப்பானிய பிரதமர் ஹிடேகி டோஜாவை முதுகில் சுமந்து செல்லும் கழுதை”. ‘‘அவர் ஜப்பானின் கட்டளையை சிரமேற்கொண்டு இந்தியர்களை காட்டிக் கொடுத்து கழுவேற்றத் துடிக்கும் கங்காணி’’ “டோஜோ என்ற கொழுத்த பயில்வானால் கைப்பிடித்து அழைத்துச் செல்லபபடும் குள்ளச்சிறுவன்’’ இப்படியெல்லாம் ‘அர்ச்சனைக்குள்ளானவர் யார் என்கிறீர்களா? தியாகம், விடுதலை உணர்வு ,வீரம், சாதுர்யம், தேசபக்தி இவற்றுக்கு திருவுருவம் என்று பாரதீயர்களான நாமெல்லாம் போற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைத்தான் ஒரு கூட்டம் அநாகரிகமாக வர்ணித்தது.
எந்த கூட்டம் ? வேறு யார்? சொந்த மண்ணில் எல்லா வசதிகளையும் அரசின் சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு தாய் மண்ணிற்கே எதிராக செயல்படும் கம்யூனிஸ்டுகள்தான். அவர்கள் அரசியல் கருத்தியல் அயல்நாட்டு இறக்குமதி. அதனால் தான் அவர்களுக்கு பாரத மண்ணின் மாமனிதர்களைக் கண்டால் வேப்பங்காயாக கசக்கிறது. இரண்டாம் உலகப் போரில் வெள்ளையனே வெளியேறு போராட்டங்களின் போதேல்லாம் கம்யூனிஸ்டுகள் – அப்பொழுது ஒரே CPI (60களில்தானே பிரிந்தார்கள்) பிரிட்டிஷ் ஆட்சியின் அடிவருடிகள், அவர்களுடைய பத்திரிகையான மக்கள் யுத்தம் (பீப்பிள்ஸ் வார்) ஜூலை 18, 1943 தேதியிட்ட இதழில் நேதாஜி பற்றி எப்படி எழுதியிருக்கிறது பாருங்கள். ‘‘ஹிட்லர், போஸை ஜப்பானின் பிரதமர் வசம் ஒப்படைத்தார். டோஜோ இந்த ‘தேசபக்தரை’ (கிண்டல்) நம் இந்தியருக்கு எதிராக இந்த பிரதேசத்தின் நிலவரங்களை கண்காணிக்கும் பொறுப்பில் ஐந்தாம் படைக்குத் தலைமை தளபதியாக நியமித்துள்ளது. போஸூம் அந்த ஹோதாவில் சிங்கப்பூரில் வானொலி வாயிலாக தினமும் உரையாற்றித் தள்ளுகிறார். போஸின் முயற்சிகள் சீன நாட்டுக்கு உதவ தயாராக இருக்கும் சகோதர நாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கின்றன!
கம்யூனிஸ்டுகள் ‘ரஷ்ய – சீன தேசபக்தர்கள்’, மறுப்பேயில்லை. இப்பொழுது புரிகிறதா, நேதாஜி என்ற வானில் தகதகத்த சூரியனைப் பார்த்து இடதுகள் ஏன் குரைத்தன என்று?
ஆதாரம்: ஷான் கஷ்யப், ஆர்கனைசர், அக்டோபர்.21, 2018 இதழ்)