புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் தொடங்கிய ஹைடிரோ கார்பன்” எடுக்கும் திட்டம், போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் காரணமாக எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சரியா? தவறா? மக்களுக்கு நன்மையா? கெடுதலா? இதை ஏன் எதிர்க்கவேண்டும் அல்லது ஆதரிக்க வேண்டும்? இதை எதிர்ப்பவர்கள் யார்? ஆதரிப்பவர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள்? அரசு செய்தது தவறா? சரியா? என்கிற இந்த கேள்விகளுக்கு பதில்தான் இந்த கட்டுரை:
* வீடு கட்ட தோண்டும் மண்ணை தெருவில் குவித்தால் அது குப்பை, புழுதி, சுற்றுச்சூழலுக்கு கேடு. ஆனால் நாம் குவிக்கிறோம். கட்டடங்களை உடைத்த கழிவுகளை சாலையில் பரப்புகிறோம். இது சுற்றுச்சூழல் மாசு. ஆனாலும் செய்கிறோம்.
* திருப்பூர், ஈரோடு பகுதிகளில் சாயப்பட்டறைகள் சந்தடி இல்லாமல் பவானி நீரை மாசுபடுத்துகின்றன. சென்னை கூவத்திலிருந்து கும்பகோணம் மோரி வாய்க்கால் வரை ஒவ்வொரு ஊரிலும் குடிநீர் ஆதார கால்வாய்கள், நம்முடைய அசட்டையால், மாசுபடுத்தப்பட்டு சாக்கடையாக மாறி ஆறுகளில் கலந்து கொண்டிருக்கின்றன.
* நம் வீட்டில் உபயோகித்த எலக்ட்ரானிக் குப்பை, நாம் உண்டு சுவைக்கும், கோழி, மாடு, ஆடு, ரத்தம், எலும்பு, நம் உடலைக் காக்கும் மருத்து, சிரிஞ்ச், பேண்டேஜ் என்கிற ஆஸ்பத்திரி குப்பை, நம் வீட்டு முன்பு நாம் குவித்திருக்கும் தெரு குப்பை, சுற்றுச்சூழலை கெடுத்து, மாசுபடுத்திக் கொண்டிருப்பது அன்றாட ஆனால் தொடர்ந்த நீண்டகால அவலம்!
ஒரு பொருளால் ஏற்படும் ஆபத்தை விட, அதிகம் எனில், ஆபத்தை தடுப்பது, அல்லது குறைப்பதே மனித சமூகத்தின் வேலையாக இருக்க வேண்டும்.
* வீட்டு உபயோக பெட்ரோலிய எரிவாயு வந்தபிறகு, விறகு, கரி அடுப்பு புகையினால் ஏற்படும் நுரையீரல் நோய்களால் ஆண்டுதோறும் இறந்து கொண்டிருந்த 10 லட்சம் குடும்பப் பெண்களின் உயிரை காப்பாற்ற முடிந்தது!
* கம்ப்ரெஸ்ட் நேச்சுரல் கேஸ் (CNG) வந்ததால் இன்று வாகனங்கள் உமிழ்ந்து கொண்டிருந்த கோடிக்கணக்கான டன் கரியமில வாயு நிறுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் காப்பாற்றப்பட்டு, வாயுமண்டலம் வெப்பமயமாவது தடுக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை நெடுவாசலில் துவங்கிய ஹைடிரோ கார்பன் என்பது பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயுவை வெளியில் கொண்டு வரும் திட்டம். இது கடந்த 9 ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. இதுபோல் இந்தியாவில் 44 இடங்களில் எரிவாயு தோண்டப்பட்டு எடுக்கப்படுகிறது. திடீரென ஏன் இடதுசாரிகளும் திமுகவும் காங்கிரசும் இப்போது கூச்சல் போடுகிறார்கள்?
இத்திட்டம் 2001ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது நெடுவாசல் கிராமத்திற்குட்பட்ட ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ ராஜசேகர் வலது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். அப்பகுதி எம்.பி. ப. சிதம்பரம் காங்கிரஸ். தற்போது அந்த பகுதி எம்.எல்.ஏ, திமுகவை சேர்ந்தவர். கடந்த 9 ஆண்டுக் காலமாக கத்தாதவர்கள் இன்று கூச்சலிடுவது ஏன்? மோடி ஆட்சிக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்.
சரி. இத்திட்டத்தினால் என்ன கெடுதல்? எடுக்கும்போது அதோடு சேர்ந்து கார்பன்-டை-ஆக்ஸைடு என்கிற கரியமில வாயுவும் நைட்ரஜனும் வரும். இதை எடுக்கும் போது நிலத்தடி நீரும் வெளியே வரும். இவைகளெல்லாம் கெடுதல் விளைவிப்பவை – இதுதான் இவர்களின் குற்றச்சாட்டு.
இப்போது நம் வீட்டில் உபயோகிக்கும் வீட்டு உபயோக கேஸ் இப்படி எடுத்ததுதான். இது 100 சதவீதம் எரிந்துபோகும். இதனால் ஒரு சதவீதம் கூட சுற்றுச்சூழல் கேடு இல்லை. ஆனால் விறகு, கரி, அடுப்பினால் நுரையீரல் புற்றுநோய் வரும் பெண்களை காப்பாற்ற இதுவரை ஒரு கோடி பெண்களுக்கும் இனி 5 கோடி வீடுகளுக்கும் இலவச கேஸ் இணைப்பு கொடுக்க வேண்டுமென்றால் அது எதனால் முடிந்தது? நெடுவாசல் போன்ற 44 இடங்களில் கேஸ் எடுத்தால் மட்டுமே முடியுமல்லவா?
நம்முடைய அந்நிய செலாவணியின் பெரும் பங்கு நாம் பெட்ரோலிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து வாங்குவதால் தான் செலவாகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நமது உள்நாட்டு எரிவாயு உற்பத்தி 17 குறைந்துள்ளது. அதற்கு காரணம் இது மாதிரி தூண்டிவிடப்பட்ட போராட்டங்கள் தான். மக்களை விஷமிகள் தூண்டி விடுகிறார்கள் என குற்றம் சொல்வதும் தவறு. 7 ஆண்டுகளாக நடந்துவரும் திட்டத்தை அதன் சாதக பாதகங்களை மக்களுக்கு எடுத்து விளக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகள் தான். அதை ஏன் இதற்கு முன் இருந்த திமுக, அதிமுக அரசுகளும் உள்ளூர் எம்.எல்.ஏ/எம்.பிக்களும் செய்யவில்லை?
மத்திய அரசு அனுமதியும் பணமும் மட்டுமே கொடுக்க முடியும். இவைகளை வாங்கிக் கொண்டு அதன் மீது பழியை மட்டும் சுமத்துவது என்ன நியாயம்? போராட்டங்களினால் திட்டம் செயல்படுத்துவதை நிறுத்திவிட்டோம். தொடர்ந்து தூண்டிவிடப்பட்டு போராட்டம் நடந்தால் திட்டத்தை இழுத்து மூடுவதை தவிர வழியில்லை. நஷ்டம் யாருக்கு? நாட்டுக்கு மட்டுமல்ல; உள்ளூர் மக்களுக்கும்தான். புரிந்து கொள்ளுங்கள்.