சந்திரயான் -2 விண்கலத்தின் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. அதன் செயல்பாடுகளும் திருப்தியாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்த நிலையில், நிலவின் தரைப்பகுதியில் மின்காந்த துகள்கள் இருப்பதை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்பிட்டரில் உள்ள உயர் தெளிவுதிறன் கொண்ட கேமரா நிலவின் தென் துருவத்தில் எடுத்த மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளை அடையாளப்படுத்தி அறியும் வகையில், தெளிவான புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.100 கி.மீ.,உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் 14 கி.மீ., நீளமும், 3 கி.மீ., விட்டமும் கொண்ட போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதி பதிவாகியுள்ளது . இந்த பள்ளம் நிலவின் தென் பகுதியில் உள்ளது. இந்த படம் கடந்த மாதம் (05.09.19) காலை, இந்திய நேரப்படி காலை 4.38 மணியளவில் எடுக்கப்பட்டது.
மேலும் 5 மீ., மட்டுமே விட்டம் கொண்ட சிறிய பள்ளங்கள், 1 முதல் 2 மீ., உயரம உடைய பாறைகளுடன் கூடிய நிலவின் புகைப்படங்கள் தெளிவாக எடுக்கப்பட்டது. 100 கி.மீ., உயர சுற்றுப்பாதையில் இருந்து மிக தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ள உயர் தெளிவு திறன் கொண்ட கேமரா, நிலவின் ஆய்வில் முக்கியமான கருவி எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவு ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பள்ளங்களை தொடர்ந்து, அடையாளப்படுத்தி கொள்ள அந்தந்த ஆய்வில் தொடர்புடைய வானியலாளர்களின் பெயர்களை அந்த பள்ளங்களுக்கு வைப்பது வழக்கும். இந்த வகையில், இந்த பள்ளம், ஜெர்மானிய வானியல் அறிஞர் பலோன் எச் லட்விக் வான் போகஸ்லாவ்ஸ்கியின் பெயர் சூட்டப்பட்டது.