பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார் தலைமையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பிகார் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்வோம் என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உறுதியாகக் கூறியுள்ளார்.
இதன் மூலம் பிகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி தொடரும் என்பதை அமித் ஷா உறுதி செய்துள்ளார்.
பிகார் மாநிலம் வைஷாலியில் வியாழக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவாக பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்,
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதும், வன்முறை மூலம் பலர் உயிரிழக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்கான சட்டமே தவிர யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் இல்லை என்பது தெளிவாக உள்ளது. இது தொடர்பாக மக்களிடம் தெளிவை ஏற்படுத்துவதை பாஜக மிகப்பெரிய பிரசார இயக்கமாக நடத்தி வருகிறது.
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்படியாவது உடைந்துவிடாதா என்று சிலர் காத்திருக்கின்றனர். முக்கியமாக ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறையில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைய வேண்டும் என்று கனவு கண்டு வருகிறார். ஆனால், அது ஒருபோதும் நடக்காது.
பிகாரில் நிதீஷ் குமார் தலைமையில்தான் சட்டப் பேரவைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொள்ள இருக்கிறது. தேசம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், பிகார் மாநிலம் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்றார் அமித் ஷா.
முன்னதாக, பல்வேறு தொலைக்காட்சி பேட்டிகளில் பிகாரில் நிதீஷ் குமார் தலைமையில்தான் தங்கள் கூட்டணி தேர்தலைச் சந்திக்கும் என்று அமித் ஷா கூறியுள்ளார். இப்போது முதல்முறையாக பிகார் மண்ணில் வைத்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.