பொதுமக்கள் தங்கள் தொழில் சார்ந்த ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் ஒட்டுகின்றனர். நீதிபதி, வழக்கறிஞர், ஊடகம், மருத்துவர், காவல்துறை என பலர் இப்படி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி பயணிப்பது சமீப காலமாக அதிகரித்து விட்டது. கெளரவம், வாகன சோதனையில் இருந்து தப்பிக்க என பலர் இவ்வாறு செய்கின்றனர். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் தன் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. வழக்கறிஞர் ஸ்டிக்கருக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது எனவும் கேட்டுள்ளது நீதிமன்றம். இந்த விவகாரத்தில் இது நல்லதொரு தொடக்கம்.
நாம் அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்தான். எனவே சட்டத்தை அனைவருமே மதித்து நடக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பேணப்பட்டால் மட்டுமே நாட்டில் அமைதி நிலவும். ஸ்டிக்கர் ஒட்டி பயணிப்பவர்கள் மட்டுமல்ல, அரசு பேருந்து ஓட்டுனர்களும் அநேகமாக போக்குவரத்து சட்டங்களை மதிப்பதில்லை, காவலர்களும் இவர்களை கண்டுகொள்வதில்லை. சாதாரண பொதுமக்கள் தலைகவசம் அணியாமல் போனால் பிடிக்கும் காவலர்கள் முஸ்லிம்கள் தலையில் தொப்பி வைத்து போனால் கண்டும் காணாமலும் விட்டுவிடுகின்றனர். போக்குவரத்து சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவலர்களே அதை மீறி செயல்படுகின்றனர். இவை யாவும் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளாகவே ஆகிவிட்டன என்பது வருத்தமளிக்கும் உண்மை.
பொதுமக்கள் மட்டுமல்ல அனைவருமே அனைத்து போக்குவரத்து சட்டங்களை மதிக்க வேண்டும். தவறாமல் பின்பற்ற வேண்டும். இவற்றை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை இதற்கு பயன்படுத்த வேண்டும். அனைத்திற்கும் மேலாக பொதுமக்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் பொறுப்பான குடிமக்கள் என்பதை நினைவில் வைத்து நடக்க வேண்டும்.