அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில் பல ஆண்டுகள் இருந்து, சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நடிகர் ராதாரவி: பா.ஜ.,வில் நான் சேர்ந்ததை, பலர் பல விதமாக பேசுகின்றனர். நான் ஒரு ஹிந்து; பா.ஜ., கொள்கைகள் பிடித்திருந்தன; அதனால், அக்கட்சியில் இணைந்து விட்டேன். அங்கே போய் பார்த்த பிறகு தான், பல விஷயங்கள் தெரிய வருகிறது.
கட்சியில் சேர்வதற்கு முன், பா.ஜ., மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து, ‘உங்கள் கட்சியில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை சமமாக வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என்ற அவர், பல உதாரணங்களுடன் விளக்கினார். ‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளோம்; ஆனாலும், அங்கிருக்கும் ஒரு முஸ்லிமை கூட வெளியேற சொல்லவில்லை. ஆனால், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கிலிருந்து லட்சக்கணக்கான, காஷ்மீர் பிராமணர்களான, ‘பண்டிட்’களை அவர்கள் வெளியேற்றிய வரலாறு உள்ளது’ என்றார்.
இப்படி, பல சந்தேகங்களை கேட்டு, தெளிவு பெற்ற பிறகு தான், பா.ஜ.,வில் இணைந்தேன். என் அப்பா, எம்.ஆர்.ராதா பகுத்தறிவுவாதி தான். ஆனால், அவரின் அப்பா, பகுத்தறிவுவாதி இல்லையே… அதனால், நான் மட்டும் ஏன் தனித்துவமாக இருக்கக் கூடாது. என் அப்பா உயிருடன் இருந்த போதே, கோவில்களுக்கு சென்று வந்துள்ளேன். ‘ஏண்டா கோவிலுக்கு போனே…’ என, அவர் ஒருபோதும் கேட்டதில்லை. என்னை பொறுத்தவரை, நான் பார்த்த கடவுள், அம்மா – அப்பா தான். அ.தி.மு.க.,வில் நான் இருந்த போது, பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா, என்னையும், எஸ்.எஸ்.சந்திரனையும் நன்றாக பயன்படுத்திக் கொள்வார். கட்சி கூட்டங்களுக்கு எங்களை அனுப்பியபடியே இருந்தார். நாங்களும் ஆர்வமாக கட்சிப் பணியாற்றினோம். ஆனால், இப்போது அவ்வாறு இல்லை.
அதற்காக, இப்போதைய தலைமை பிடிக்கவில்லை என, அர்த்தம் இல்லை. அவர்களுடன், ‘கெமிஸ்ட்ரி’ ஒத்துப் போகவில்லை. மேலும், பா.ஜ., தரப்பிலிருந்து, ஓராண்டுக்கும் மேலாக, கட்சியில் சேர சொல்லி, என்னை அழைத்துக் கொண்டிருந்தனர். கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, முரளிதர ராவ், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்றோருக்கு, பா.ஜ.,வில் நான் சேர்ந்தது நன்றாக தெரியும்; எஸ்.வி.சேகர் கூட, வாழ்த்து தெரிவித்திருந்தார்.