சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடப்பதாகவும் அதை தடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு 49 பிரபலங்கள் கடிதம் எழுதியிருந்தனர். அதற்கு எதிராக தற்போது 62 பிரபலங்கள் பகிரங்க கடிதம் எழுதி தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடந்த 23-ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தனர். அதில், ‘‘கருத்து வேறுபாடு இல்லாமல் ஜனநாயகம் இல்லை. சிறுபான்மை யினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி வன்முறைகள் நடக்கின்றன’’ என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், அரசியல் சார்புடன் பொய்யான கதைகளை வெளியிட்டுள்ளதாக 62 பிரபலங்கள் பகிரங்க கடிதம் வெளியிட்டுள்ளனர். 62 பேர் அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மையினர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு 49 பேர் பகிரங்க கடிதம் எழுதியதை அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். ‘இந்த தேசம், ஜனநாயகம் குறித்து 49 சுய பாதுகாவலர்கள் – மனசாட்சிப்படி செயல்படுபவர்கள்’, மீண்டும் ஒரு முறை தங்கள் ஒருதலைபட்சமான கவலைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தெளிவாக வெளியிட்டுள்ளனர்.
அந்த 49 பேரில் சிலர் ஊடுரு வல்காரர்கள், தீவிரவாதிகளின் ஊதுகுழலாக கடந்த காலங்களில் இருந்ததற்கு பதிவுகள் உள்ளன. எங்களைப் பொறுத்த வரையில் இந்தியாவின் ஒற்றுமை அதன், சுதந்திரம் புனிதமானது. இவற்றைக் கேள்வி கேட்கும் எவரும், இவற்றை நீர்த்துப்போகச் செய்ய அல்லது அழிக்க சதி செய்யும் எவரும் எதிர்க்கப்பட வேண்டும்.
பிரதமருக்கு கடிதம் எழுதிய அந்த 49 பேரும், முத்தலாக்கை எதிர்த்து நிற்கும் பெண்களுக்கு ஆதரவாக, முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுடன் சேர்ந்து இந்த 49 பேரும் கருத்துகளை வெளியிட்டுள்ளதாகவே நினைக்கி றோம்.
பிரதமர் மோடி சிறந்த நிர்வாகத்தை வழங்க ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்களுடைய கடிதத்தில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழை கெடுக்கவும் பிரதமர் மோடியை தவறானவராக சித்தரிக்கும் நோக்கமே தெரிகிறது. உண்மையில் பிரதமர் மோடி ஆட்சியில்தான் அரசை தவறாகப் பேசவும் கருத்து வேறுபடவும், விமர்சிக்கவும் அதிகபட்ச சுதந்திரம் இருப்பதை நாங்கள் காண்கிறோம். இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு 62 பிரபலங்களும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.