தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கிவைத்தனர்.
சிங்களம், தமிழில் வணக்கம் சொன்ன பிரதமர்: கப்பல் சேவையை தொடக்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வணக்கம் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா – இலங்கை இடையே தூதரக, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம். இந்தச் சூழலில் இலங்கை காங்கேகசன்துரை – இந்தியாவின் நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவதில் மிக முக்கியமான மைல்கல். இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவையானது போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதோடு வர்த்தகத்தையும் வளர்க்கும். இருநாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால உறவை வலுப்படுத்தும்” என்று கூறினார். இந்தியா – இலங்கை இடையேயான கடல்வழிப் போக்குவரத்துக்கு சங்க இலக்கியங்கள் பட்டினப்பாலை, மணிமேகலையில் சான்று இருப்பதாக பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசினார்.