ஆண்டுதோறும் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. உடல் நலமும் மனநலமும் ஒருங்கிணைந்ததுதான் பூரண நலம்.
உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. உடல் நலக் கோளாறுக்கு உடனடியாக சிகிச்சை பெற முன் வருபவர்கள் கூட மன நல கோளாறுக்கு சிகிச்சைபெற முன்வருவதில்லை. உடல் நல குறைபாடு உள்ளவர்களிடம் பரிவு காட்டும் சமூகம் மனநலக் குறைபாடு உடையவர்களிடம் பரிகாசம் காட்டுகிறது.
இன்று உடல் உழைப்பு குறைந்துவிட்டது. அதே நேரத்தில் தேவையற்ற நுகர்வு கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த இரண்டும் சேரும்போது உடலின் ஆற்றல் படிப்படியாக நலிவடையத் தொடங்குகிறது. உடலுக்கு எப்படியாவது வேலை கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 அல்லது 4 கிலோ மீட்டர் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களாவது இதை நடப்பது உடல்நலத்துக்கு பெரிதும் உகந்தது. மேலும் நமது நாட்டு பாரம்பரிய உணவு வகைகளை தொடர்ந்து பயன்படுத்துவதும் அவசியம்.
பகிர்வு, உடல் நலத்துக்கும் உகந்தது. மன நலத்துக்கும் உசிதமானது. பகிர்ந்து கொள்ளப்படுகின்ற துக்கம் தேய்பிறையாகிறது. பகிர்ந்து கொள்ளப்படாத துக்கம் மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது. முன்பெல்லாம் குடும்ப உறவுகளிடையே காணப்பட்ட நெருக்கம் இப்போது இருக்கிறதா என்ற கேள்விக்கு மனநிறைவான பதிலை அளிக்க இயலவில்லை. ஒரே வீட்டில் வசித்துவந்த போதிலும் குடும்ப உறுப்பினர்களிடையே அன்யோன்யம் குறைந்துகொண்டே வருகிறது. உளவியலில் அந்நியமயமாதல் என்ற கோட்பாடு குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. நிகழ்காலத்தில் இந்த அந்நியமயமாதல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
கணவன் மனைவி இடையேயும் பெற்றோர் குழந்தைகள் இடையேயும் உரசலும் விரிசலும் அதிகரிக்கின்றன. மனம் விட்டுப் பேசினால் இதை நிச்சயமாகத் தணிக்க முடியும். ஆனால் ஈகோ பிரச்சினை காரணமாக யாரும் தாழ்ந்துபோக விரும்பவில்லை. ஆனால் அதேநேரத்தில் விட்டுக்கொடுப்பவர்கள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. கணவனும் மனைவியும் விட்டுக்கொடுக்க முன்வரும்போது உறவு வலுப்படுகிறது. விட்டுக்கொடுக்க முன்வராத போது உறவு நலிவடைகிறது. இது பெற்றோர் – குழந்தைகள் இடையிலான உறவுக்கும் பொருந்தும்.
ஒருவர் மற்றவரின் எதிர்பார்ப்புகளை நூறு சதவீதம் பூர்த்திசெய்ய முடியாது. இன்னும் சொல்லப்போனால் எதிர்பார்ப்புகள் நிரந்தரமானவை அல்ல. அவை மாறிக்கொண்டே இருக்கும். இன்றுள்ள நதி, நேற்றுள்ள ஆறு அல்ல. நாளை ஓடும் நதி இன்றுள்ள ஆறாக இருக்கப் போவதில்லை. நதி மாறிக்கொண்டே இருப்பதைப் போல மனிதனும் நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறான். இதை உணர்ந்து நடந்துகொண்டால் விபரீதங்கள் பலவற்றை விலக்க முடியும்.