நல்லவனாக இரு…

ஒரு மேற்கத்தியர் ”எங்கள் கிறிஸ்தவ மதம் மனிதனுக்கு ஒரு பிறவிதான் உண்டு. ஒருவன் இறந்த பிறகு அவன் செய்யும் நற்செயல், பாவச் செயலுக்குத் தக்க நீதி வழங்கும் நாள் வரை அவன் கல்லறையில் இருத்தப்படுகிறான்  என்று கூறுகிறது. உங்கள் ஹிந்து மதம் கர்மாவிற்கு ஏற்ப பிறவிகள் உண்டு என்று கூறுகிறது.  இது பற்றி எனக்கு விளக்க வேண்டுகிறேன்” என்று காஞ்சி மகா சுவாமிகளிடம்  கேட்டார்.

அதற்கு மகா சுவாமிகள், ”காஞ்சியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகள் சென்று அங்கு பிறந்துள்ள குழந்தைகள் பற்றிய விவரங்கள் சேகரித்து மாலையில் என்னை வந்து சந்தியுங்கள்” என்று கூறி உடன் மடத்து பணியாளர் ஒருவரையும் அனுப்பி வைத்தார். அவர்  பல மருத்துவமனைகளுக்குச்  சென்று அங்கு பிறந்துள்ள குழந்தைகள் விவரங்களைச் சேகரித்து மாலையில் காஞ்சி முனிவரைச் சந்தித்தார். மருத்துவமனையில் பார்த்த குழந்தைகள் பற்றிய விவரங்களை கூறினார்.

”கொழு கொழு என்று சில குழந்தைகள், பலவீனமாக சில குழந்தைகள், கருப்பு, சிவப்பு நிறமென சில குழந்தைகள், உடல் ஊனமுற்ற குழந்தைகள், பணக்கார, ஏழை குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் என பல வேறுபாடுகளில் உள்ள குழந்தைகளைப் பார்த்தேன்” என்றார்.

”பிறந்த குழந்தைகளில் ஏன் இத்தனை வேறுபாடுகள்? இறைவனுக்கு ஏன் இந்த பாரபட்சம்? இதுதான் முற்பிறவியின் ‘கர்மபலன்’ என்று ஹிந்து மதம் கூறுகிறது” என்றார்  சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இந்த கர்மா தியரியில் ஒரு சிறப்பு என்னவென்றால் நாளை நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமானால் இன்று நல்லவனாக இரு என்பதுதான் அது” என்று சொல்லி ஆசி வழங்கினார்.