கிர்கிஸ்தானில் சிக்கி உள்ள, இந்திய மாணவர்களை அழைத்து வர, ‘பாலிவுட்’ நடிகர் சோனு சூட் ஏற்பாடு செய்துஉள்ள தனி விமானம், மோசமான வானிலை காரணமாக, இன்று புறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பாலிவுட்’ நடிகர் சோனு சூட், 46, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், வில்லனாக நடித்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்புவதற்காக, தன் சொந்த செலவில், அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தார். இவரது உதவி, பல்வேறு தரப்பினரிடமும், பாராட்டு களை பெற்றது. இந்நிலையில், மத்திய ஆசிய நாடான, கிர்கிஸ்தானில் படித்து வரும், 3,000 இந்திய மாணவர்களை அழைத்து வர, தனி விமான போக்குவரத்துக்கு, தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்தார்.
முதல் விமானம், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் இருந்து, நேற்று புறப்பட்டு, உத்தர பிரதேசத்தின், வாரணாசி வந்து சேர்வதாக, திட்டமிடப்பட்டு இருந்தது. மோசமான வானிலை காரணமாக, இந்த பயணம், இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.இது குறித்து, தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் தகவல் தெரிவித்த நடிகர் சோனு சூட், ‘விமானம் புறப்படும் நேரம் குறித்து, விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்’ என, பதிவிட்டு இருந்தார்.’கிர்கிஸ்தானில் இருந்து, அடுத்து வரும் நாட்களில், மேலும் பல தனி விமானங்கள், இந்திய மாணவர்களை அழைத்து வர உள்ளது. பதிவு செய்யாத மாணவர்கள், உடனடியாக பதிவு செய்து கொள்ளவும்’ என, சோனு சூட் தெரிவித்து உள்ளார்.