நடந்தாய் வாழி கோதாவரி!

காவிரி நீர் தமிழகத்து தரையில் புரண்டு ஓடுவதை நிறுத்தி கால் நூற்றாண்டு கடந்த பின்பும், கோர்ட், கேஸ், போராட்டம், ஆர்ப்பாட்டம், விவாதம் என்கிற ‘ஓசைகளை’ மட்டும் எழுப்பிவரும் தமிழக அரசியல்வாதிகள், செய்துமுடித்த காரியம் ஒன்று உண்டென்றால், தஞ்சை டெல்டா பகுதியை ‘வெடிப்பு’ நிலங்களாக மாற்றியது மட்டுமே.

ஆனால் ஓசைப்படாமல் உருப்படியாக தங்களுக்கும் மகாராஷ்ட்ரத்துக்கும் இடையே இருந்த 10 ஆண்டு கால கோதாவரி நதி நீர் தாவாவை சுமுகமாக தீர்த்திருக்கிறார்கள், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும், மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்நவீசும்!

இது முடியுமா? நடக்குமா? சாத்தியமா? என அனைவரும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும்போது, பிரச்சினைக்கு காரணமான கோதாவரி நதியில் மூன்று புதிய திட்டங்களை கொண்டுவந்து இரண்டு மாநிலங்களும் எப்படி பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதையும் பேசிமுடித்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் இந்த இரண்டு முதல்வர்களும்.

கடந்த ஆகஸ்ட் 23 அன்று மும்பையில் இந்த ஒப்பந்தம் நிகழ்ந்தேறியிருக்கிறது!kodhavari-agre

கலியுகத்தில் இப்படி ஒரு செய்தியா? இந்திய மாநிலங்களில் இப்படி ஒரு நிகழ்வா? – என ஆச்சரியங்கள் அலை அலையாக வந்து மோதுவது அதிசயமில்லை தான்.

மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, நதிகளின் மொழி மாநிலங்களுக்கு தெரியவில்லை! தோன்றுமிடத்திலிருந்து முடியும் இடத்தில் கடலில் சங்கமிக்கும் வரை, அனைவருக்கும் அரணாய், அன்பாய், ஆதரவாய் இருப்பதுதான் நதிகளின் மொழி! பாயும் இடத்தையெல்லாம் வளப்படுத்தவும், ஓடும் இடமெல்லாம் செழுமைபடுத்தவும், உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்தவும் தண்ணீரைத் தந்து தாகம் தீர்ப்பதுதான் நதிமொழியின் அர்த்தங்கள்!

இதற்கு அரசியல் அசைவுகளை கொடுத்து, தடுப்பணைகளை கட்டிய அணையின் உயரத்தை உயர்த்தி, அணைகளை திறந்து விடுவதை நிறுத்தி, அடுத்த மாநிலத்தின் ‘வயிற்றெரிச்சலை கொட்டி’ ‘வாழ்வாதாரங்களை சிதைத்து’ ‘வறட்சியை அரியாசனத்தில் ஏற்றி, ரம்யமான உறவுகளை ரணகளப்படுத்தி, நதிகளை பிரச்சினைக்குள் அடைத்து நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்!

அப்பப்பா! ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பது போல் எந்த மாநிலமும் தீராத பிரச்சினையை கையில் வைத்திருக்கிறது என்றால் அது ‘நதிநீர் தாவா’ தான்.

சத்தீஸ்கரும் ஒடிஸாவும் முட்டிமோதும் மகாநதி பிரச்சினை, கர்நாடகாவும் தமிழ் நாடும் சிண்டை பிய்த்துக்கொள்ளும் காவிரி நதி நீர் பிரச்சினை, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா அடித்துக்கொள்ளும் கிருஷ்ணா நதிநீர் பிரச்சினை, ஆந்திராவிற்கும் கர்நாடகாவிற்கும் இடையேயுள்ள துங்கபத்ரா நதி நீர் தாவா, கேரளாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள முல்லைப் பெரியார், ஆழியார் – பவானி பிரச்சினை, இப்போது புதிதாக கிளம்பியுள்ள, சிறுவாணி நீர் தடுப்பணை பிரச்சினை, குஜராத், மகாராஷ்ட்ரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் இவற்றிடையே இருந்த நர்மதா நீர் பிரச்சினை, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல், ராஜஸ்தான் இடையே உள்ள ரவி-பியாஸ் நதிநீர் பிரச்சினை, அஸ்ஸாம், மணிப்பூர் இடையே உள்ள பாரம் நதிநீர் பிரச்சினை என தலைமுறை தலைமுறையாய் தீர்க்கப்படாத அண்டை மாநில நதிநீர் தாவாக்கள் இவை!

இவைகள் வரும் என எதிர்பார்த்தோ என்னமோ நமது அரசியல் சாஸனப் பிரிவு 13, 262, 263லும், கீடிதிஞுணூ ஆணிச்ணூஞீ அஞிணா 1956 மற்றும் ஐணணாஞுணூண்ணாச்ணாஞு தீச்ணாஞுணூ ஈடிண்ணீதணாஞு அஞிணா 1956ம் ஏற்கனவே நாம் உருவாக்கி இருக்கிறோம்!

கிருஷ்ணா நதிநீர் டிரிப்யூனல் 2010 டிசம்பர் மாதம் ஆந்திரா, கர்னாடகா, மகாராஷ்டரா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பங்கீடை சுமுகமாக தீர்த்து வைத்தது.

கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டுக்குமான காவிரி நீர் தாவாவிற்கு 2007லேயே டிரிபியூனல் அவார்டு கொடுத்தது. இதை இரண்டு மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளாமல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால், இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆயினும் கொடுக்கவேண்டிய நீரை கர்நாடகம் தமிழகத்துக்கு தராமல், கோர்ட் அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது!

இப்படி நதி உற்பத்தியாகும் மாநிலம், நீர் உபயோகிப்பதில் தன் பங்குக்கே எல்லாம் என்றபடி செயல்பட, நீர் ஓடிவரும் ‘கடைமடை’ மாநிலம், அந்நீரை சுவைத்தது மட்டுமன்றி, அதை உபயோகித்து சாகுபடி செய்து, அறுவடை செய்து பலன் பெற்றதை திடீரென உற்பத்தியாகும் மாநிலம் நிறுத்தி, தடுத்து, ரகளை செய்யும் ‘ரவுடித்தனம்’ இப்போது அரங்கேறி வருகிறது.

இச்சூழலில் தான் தெலுங்கானாவிற்கும் மராட்டியத்திற்கும் இடையே கையெழுத்தான கோதாவரி நதிநீர் ஒப்பந்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது!

ஏற்கனவே நதிநீர் தாவாக்கள்” ராகத்தையே” கேட்டு செவிடான காதுகளுக்கு கோதாவரி ஒப்பந்தம் அதிசய ராகம், அபூர்வ ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகமாக கேட்கிறது!

எதற்கெடுத்தாலும் மத்திய அரசையே குற்றஞ் சொல்வது, ‘முணுக்கென்றால்’ மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையே தொழிலாகக் கொண்ட மாநில முதல்வர்களும் கொண்ட இந்தியாவில், மத்திய அரசின் உதவி பெரிதும் இல்லாமல், டிஆர்.எஸ் முதல்வர் சந்திரசேகர் ராவும் பிஜேபி முதல்வர் பட்நவீசும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முடிகிறது என்றால்… இது மற்ற மாநில முதல்வர்களாலும் முடியும் என்றுதானே தெரிகிறது!

ஏன் முடியவில்லை என்பதற்கு என்ன காரணம் சொல்வது… அரசியல், அரசியல், அரசியல் ஒன்று மட்டும்தான் காரணம். பிரச்சினைக்குரிய இரண்டு மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தபோதும் கூட பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி இணக்கமாக இருந்தாலும் பிரச்சினை தொடர்கிறது என்பதெல்லாம் ‘மார்க்கம் தெரியவில்லை! காரணம் மனம் இல்லை!’

பட்நவீசிற்கும் சந்திரசேகர ராவிற்கும் வழி பிறந்தது. காரணம் மனம் இருந்தது!

மற்ற முதல்வர்களுக்கு இது (மனம்) வரட்டுமே!  அப்போது வழி பிறந்துவிடும் – திறந்துவிடும் அல்லவா?