தேவையற்ற ஆணி தீய சக்தியே

ஆர்.எஸ்.எஸ் பற்றிய உண்மை ஒன்று; சங்கத்தைப் பற்றி ஊடகங்கள் இது வரை உருவாக்கி வைத்திருக்கிற பிம்பம் வேறு; இந்த நிலையை மாற்ற ‘விஜயபாரதம்’ செய்து வரும் முயற்சிகளை பாராட்டும் விதமாக சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத், “இதுநாள் வரை ஸ்வயம்சேவகர்களின் மாசு மருவற்ற நல்லொழுக்கம், அவர்கள் செய்யும் ஹிந்து ஒற்றுமைப் பணி ஆகியவை குறித்த உதாரணங்களே, ஆர்.எஸ்.எஸ் பற்றி ஊடகங்கள் கட்டமைத்து வந்துள்ள தவறான பிம்பத்தை தகர்த்து வந்துள்ளன. இனியும் அவ்வாறே நிகழும்” என்று (சென்ற ஆண்டு ‘விஜயபாரதம்’ மலருக்கு அளித்த வாழ்த்துரையில்) தெரிவித்தார்.

ஊடகத்தின் சில பகுதியினர், தேசிய சக்திகள் பற்றி அவதூறு பரப்பும் இழிசெயலில் இறங்குகின்றனர் என்றால் காரணம், அந்த புள்ளிகளுக்கு அரசியல்வாதிகளின் சில பகுதியினர் வன்முறையை தூண்டும் பிரிவினைவாத, தேச விரோத, பயங்கரவாத தரவுகளை ஊட்டி வருகிறார்கள். மேற்படி ஊடகப் பிரிவினரும் நன்றியுள்ள பிராணிகளாக, ஊர் நடுவில் அவதூறு பரப்புகிறார்கள்.

மேற்படி அரசியல்வாதிகள் எதிர்த்தரப்பினரை விமர்சிக்க உரிமை உண்டு. அந்த உரிமையின் போர்வையில் தமிழகம் உள்பட பாரத நாடு முழுவதும் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக தேசிய உணர்வுக்கு, தேசிய சக்திகளுக்கு ஊட்டம் அளித்து வருகிற சங்கத்தை இவர்கள் குறி வைப்பது, அவலை நினைத்து உரலை இடிக்கும் அறிவிலிகளின் செயல். ஹிந்து சமுதாயத்தில் அரசியல் சார்பற்ற மிகப் பெரும்பான்மையினரான பொதுமக்கள் இந்த நிலவரத்தை உள்வாங்கிக் கொள்ளச் செய்வது மிகவும் அவசியம்.

இந்த நிலவரத்தில் ஸ்வயம்சேவகர்கள் எப்போதும் போல தங்கள் ஆக்கபூர்வ செய்கையால் மிகச் சரியான எதிர்வினை ஆற்றுகிறார்கள். ஜனவரி 2 அன்று சிதம்பரம் தேர்த் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடினார்கள். நான்கு தேரோடும் வீதிகளிலும், திருவிழாவுக்கு மறுநாள் படுசுத்தமான காட்சி தென்பட்டது.

‘சிதம்பரம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்க’ தன்னார்வலர்களாக நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் உள்ளூர் மக்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டார்கள் என்பதுதான் இதற்குக் காரணம் (“இனியும் அவ்வாறே நிகழும்” என்று மேலே மோகன்ஜி தெரிவித்தது அவ்வாறே நிகழ்ந்தது!).

பயிற்சி அளித்து பண்பாளர்களை உருவாக்கும் ஈடு இணையற்ற இந்த நல்லோர் சக்தியை எதிர்க்கும் தீயோர் கும்பல், மாநில அதிகார பீடத்தின் சில எடுபிடிகள் என்பதை பொதுமக்கள் இப்போதெல்லாம் அடையாளம் கண்டு கொண்டு விடுகிறார்கள். மக்களுக்கு பண்பாளர்கள் தான் தேவைப்படுகிறார்கள். தேவையற்ற ஆணி எது என்பது குறித்து சந்தேகமே கிடையாது.