காங்கிரஸ் தலைவர்கள் என்றுமே தேசத்தை நேசித்ததில்லை. இதற்கு சரித்திரத்தில் சான்றுகள் பல உள்ளன. சீனா அக்ஸாய்சின் பகுதியை பிடித்த போது அந்த இடத்தில் புல், பூண்டு கூட வளராது என்றார் நேரு. பாகிஸ்தான் போரில் வெற்றி பெரும் நேரத்தில் எல்லையை விட்டு கொடுக்க ஒப்பந்தம், எல்லாம் இவர்களின் திருவிளையாடலே. கச்சதீவை இலங்கைக்கு திமுக துணையுடன் தாரை வார்த்தவர் இந்திரா.
கடந்த 1988-ல் ராஜீவ் காந்தி தன் சீன பயணத்தில் சீனாவுடன் தேசவிரோத ஒப்பந்தத்தை போட்டார். அருணாசல பிரதேசத்தின் தபாங் உள்ளிட்ட சில பகுதிகளை தாரைவார்க்கவும் ஒப்புக்கொண்டார். ‘மக்மோகன் கோடு என்பது சிறிய பேனாவால் வரையப்பட்ட தடிமனான கோடு’, ‘எல்லைகள் மாற்றத்திற்கு உட்பட்டவையே’ என தேசவிரோத கருத்துகளை உதிர்த்தார் ராஜீவ். வாஜ்பாய், பிரணாப் முகர்ஜி, ஜார்ஜ் பெர்ணாண்டஸ் உள்ளிட்ட தலைவர்கள் இந்த முட்டாள்தனத்தை எதிர்த்தனர். அதனால் தபாங் தப்பியது.
சோனியா நம் தேசத்தின் ரகசியங்களை சீனாவோடு பகிரும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தை சமீபத்தில் போட்டதை உலகமே அறியும். இன்றும் ராகுல் தன் ட்வீட்டுகளிலும், பேச்சிலும் பாரத அரசின் செயல்பாடுகளை சீனாவுக்கு ஆதரவாக விமர்சித்து வருகிறார். இதனை தனக்கு சாதகமாக சீனா பயன்படுத்துகிறது. காங்கிரஸ் ஆட்சியில்தான் 1962 முதல் 2013 வரை நம் தேசத்தின் பல பகுதிகளை சீனா கைப்பற்றியது. நிலைமை இவ்வாறு இருக்கையில் மோடி சீனாவுக்கு பயந்துவிட்டார் என ராகுல் கூறுவது வரலாறு குறித்த அவரின் அறிவையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.