நாம் அவ்வப்போது தமிழ் செய்தித் தாள்களில் திருப்பூரிலும் கோவையிலும் திருநெல்வேலியிலும் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் பலரில் ஒரு சிலர் ஏதோ குற்ற சம்பவத்திற்காக தேடப்படும்போது அகப்படுகிறார்கள் என்ற செய்தியை படிக்கிறோம். அவர்களுடைய தாய்நாடு எது என்று ஆராய்ந்தால் அது பங்களாதேஷிக்கோ, மியான்மாருக்கோ நம்மை கொண்டு சேர்க்கிறது. அகப்பட்டவர்கள் சிலர்தான், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் பற்றிய முழு கணக்கெடுப்பையும் எடுத்துப் பார்த்தால்தான் ஒட்டுமொத்த விபரீதம் புரியும். அண்டை மாநிலமான கேரளாவிலும் சில மாவட்டங்களில் இதுதான் உண்மை நிலை.
தற்போது மிகப் பெரிய விவாதமாக மாறியுள்ளது தேசிய குடியுரிமைப் பதிவேடு (National Registry of Citizens NRC)2024க்குள் இந்தியாவில் நுழைந்துள்ள அந்நிய நாட்டவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். சென்ற வாரம் பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நடப்புக் கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு விஷயத்தையும் குடியுரிமை திருத்த மசோதாவையும் இணைத்துப் – தமிழ்நாடு உட்பட – நாடெங்கும் ஊடகங்கள் சொல்லவேண்டியதை மறைத்தும் இல்லாதவற்றை பெரிதுபடுத்தியும் கட்டு ரைகளும், தலையங்கங்களும் எழுதித் தள்ளுகிறார்கள்; தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துகிறார்கள்.
நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து பங்களாதேஷிலிருந்து (கிழக்கு பாகிஸ்தான்) வெளியேறி, சட்டவிரோதமாக இந்தியா விற்குள் வருவது தொடர்கிறது. அந்நாட்டில் நடக்கும் மத துன்புறுத்தலினாலும், மக்கள் தொகை அழுத்தங்களாலும்,சுற்றுச் சூழல் நெருக்கடி போன்ற காரணங்களுக்காகவும் ஊடுருவல் நடக்கிறது. மேலும் அங்குள்ளதை விட, நம் நாட்டில் அதிக அளவில் தரிசு நிலங்கள், வேலை வாய்ப்புகள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள் இருப்பவையும், ஊடுருபவர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. எவ்வாறாயினும், பங்களாதேஷிலிருந்து பெரிய அளவிலான இடப்பெயர்வு நடைபெறுகிறது என்பதை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
1951-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிட்ட பிறகு இந்திய குடிமக்களை கண்டறியவும், அன்று பாகிஸ்தானின் பகுதியாக இருந்த வங்கதேசத்தவர்களை கணக்கெடுக்கவும் தேசிய குடிமக்கள் பதிவேடு அப்போது உருவாக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால், தொடர்ந்து தேசிய குடியுரிமைப் பதிவேடு நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. பல போராட்டங்களையும், வழக்குகளையும் சந்திக்க நேர்ந்ததால், கைவிடப்பட்டது. நாடு முழுவதும் தேசிய குடியுரிமைப் பதிவேடு கொண்டு வரப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்தவுடன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வகுப்புவாத நோக்கில் விவாதிப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. 1952லிருந்து முஸ்லிமகள், கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற்று ஆட்சியில் சுகத்தை அனுபவித்தார்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஊடுருவல்காரர்களின் இசைக்கு ஏற்ப நாட்டியம் ஆடுவதும் தற்போது நடக்கிறது. இதை விட முக்கியமான ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். முறையான விசா பெற்று இந்தியாவிற்கு வந்த பங்களாதேஷ், பாகிஸ்தான் நாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும் தாய் நாடு திரும்பவில்லை.
அசாம் மாநிலத்தில் தொகுக்கப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு பிழையானது என குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஆனால் கூர்ந்து கவனித்தால் 1950 முதலே ஒவ்வொரு கணக்கெடுப்பின் போதும் அசாமின் மக்கள்தொகை வளர்ச்சி ஒட்டுமொத்த நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்பை விட பல சதவீத புள்ளிகள் கூடுதல் என்ற உண்மை புரியும் (பார்க்க அட்டவணை).
எல்லை நிர்வாகப் பணிக்குழு 2000-ம் ஆண்டு அளித்த அறிக்கை பல விஷயங்களை தெளிவுப்படுத்தியது. அதனை மேற்கோள் காட்டி துணைப் பிரதமராக இருந்த அத்வானி 2003ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ”ஒன்றரைக்கோடி பங்களாதேஷ்வாசிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இவ்வாறு தஞ்சம் புகுந்தவர்களில் 80 சதவீதம் சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள். ஆண்டுதோறும் 3 லட்சம் பங்களாதேஷ் நாட்டினர் சட்ட விரோதமாக அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் போன்ற மாநிலங்களில் ஊடுருவுகிறார்கள்” எனத் தெரிவித்தார். அப்பொழுது எதிர்க்கட்சியினர் வாயடைத்து உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் தெரிந்தே சுயநல நோக்கோடு ஊடுருவலை ஆதரிக்கிறார்கள். அதிகாரிகள் கண்டும் காணாமல் நமக்கேன் வம்பு என்று தங்கள் கையை கட்டிக்கொண்டு விடுகிறார்கள்.
இந்திரா காந்தி (1971-ல் பங்களா தேஷ் நாடு உருவான பின்னர்) முஜிர் ராஹ்மானுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி 1943 லிருந்து 1971 வரை இந்தியாவில் ஊடுருவிய பங்களா தேஷ் நாட்டினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று ஒப்புக்கொண்டார். இந்திரா காந்தியின் ஆட்சியில் குடியுரிமை வழங்கியதால் ஏற்பட்டது 1983-ல் நெல்லியில் நடந்த இன படுகொலையும், அதனால் ஏற்பட்ட கலவரமும். ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த வரை, அகதிகளான ஹிந்துக்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வந்தது. 2008 பிப்ரவரி 18 தி இந்து பத்திரிகையில் வந்த கட்டுரையில், பார்படா மாவட்டத்தில் 1991ல் ஊடுருவிய பங்களா தேஷ் முஸ்லிம்களின் எண்ணிக்கை 3,95,063, இந்த எண்ணிக்கை 2001-ல் 7,35,845 ஆகியது. இதே போல் லக்கிம்பூர் மாவட்டத்தில் 1991-ல் 73,829 ஆக இருந்து மக்கள் தொகை 2001-ல் 1,34,616 ஆக மாறியது. இந்த மாற்றத்தை போலவே எல்லையில் உள்ள மாவட்டங்களில் மிகப் பெரிய அளவில் மக்கள் தொகை பெருகியது. 127 சட்ட மன்ற தொகுதிகளில் 14க்கும் மேற்பட்டவற்றில் ஊடுருவியவர்களின் எண்ணிக்கையினால் அந்நியர்களின் கையில் சட்டமன்றம் போகும் அபாயம் ஏற்பட்டது.
அசாமிற்கு அடுத்தபடி பங்களா தேஷிலிருந்து சட்டவிரோதமாக குடியேறி யவர்கள் அதிகமுள்ள மாநிலங்கள் மேற்குவங்காளமும், பிகாரும். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மொத்த 294 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஊடுருவியவர்களால், தேர்தலின் தன்மை மாறியுள்ளது. மாநில ஆட்சியாளர்கள் தயவால் எல்லை தாண்டி வந்தவர்களுக்கு உடனுக்குடன் ரேஷன் அட்டையும், வாக்காளர் அட்டையும் கிடைத்துவிடும். அவர்களும் அட்டை வாங்கிக்கொடுத்த எஜமானர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா, மம்தா பானர்ஜியும், சீதாராம் யெச்சூரியும் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று?