நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் பாரதத்தின் பாரம்பரிய அறிவியலை நவீன அறிவியலுடன் ஒருங்கிணைப்பதற்கான இலாப நோக்கற்ற தேசிய அறிவியல் இயக்கம், விஞ்ஞான பாரதி (Vijnana Bharati) சுருக்கமாக விபா (VIBHA) பற்றி அறிவோம்…
ஆரம்பத்தில் ‘சுதேசி அறிவியல் இயக்கம்’ என்று அழைக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (Indian Institute of Science) பேராசிரியர் கே.ஐ. வாசு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சில முக்கிய விஞ்ஞானிகளால், தேசிய அறிவியல் இயக்கம், விஞ்ஞான பாரதி இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் படிப்படியாக விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களிடையே ஆதரவைப் பெற்று, தேசிய அளவில் ஒரு பெரிய அமைப்பாக உருவெடுக்கத் தொடங்கியது.
1991 ஆம் ஆண்டு அக்டோபர் 20, -21 தேதிகளில், நாக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில், சுதேசி அறிவியல் இயக்கத்தை அகில பாரத அளவில் செயல்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், இந்த அமைப்புக்கு ‘விஞ்ஞான பாரதி’ என்று பெயரிடப்பட்டது.
விஞ்ஞான பாரதி (VIBHA) ஆரம்பத்தில் ஒரு சிறிய இயக்கமாகத் தொடங்கி, இன்று நாடு தழுவிய அளவில் விரிந்துள்ள ஒரு பெரிய இலாப நோக்கற்ற அறிவியல் அமைப்பாகும். பாரதம் முழுவதும் 22-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது.
பௌதீக (Physical) மற்றும் ஆன்மீக (Spiritual) அறிவியலின் இணக்கமான கலவையின் மூலம் பாரதிய பாரம்பரியத்தை, பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பது இதன் முக்கிய நோக்கம். பண்டைய பாரதம் அறிவியலில் சிறந்து ஓங்கி உயர்ந்து நின்றது பற்றி, நமது வேதங்கள், கல்வெட்டுகள், உறுதிப்படுத்தப்பட்ட நம்பகமான செவி வழிச் செய்திகள், ஆகியவை தரும் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றது. பாரதத்தின் பாரம்பரிய அறிவியலை நவீன உலக அறிவியலுடன் இணைத்து பாரதத்தின் அறிவியலை மறுசீரமைப்பது. மற்றும் சுதேசி இயக்கத்திற்குப் புத்துயிர் அளிப்பது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்களது சிந்தனைகளைத் தூண்டி, அவர்களது புத்தாக்கத்திற்கு நல்ல வடிவம் கொடுக்க உதவுதல். சிந்தனையை தூண்டுவதற்கு ஹேக்கத்தான் (Hackathon), ஐடீயத்தான் (Ideathon), பேச்சுப்போட்டிகள், வினாடி வினா, கட்டுரைப் போட்டிகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்து மாநாடுகள் நடத்துதல். விஞ்ஞானிகளும், மாணவர்களும் சந்தித்து உரையாடும் அரங்குகள் அமர்வுகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்துதல். பாரதத்தின் ஆய்வகங்களைப் பார்வையிடும் வாய்ப்புகளை ஏற்படுத்தி, அறிவியல் மனப்பான்மையை பரப்புதல். அனைத்து பாரதிய மொழிகளிலும் அறிவியல் கருத்துக்களை மொழிபெயர்த்தல்.
முக்கிய திட்டங்கள் மற்றும் முயற்சிகள்:
வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் (Vidyarthi Vigyan Manthan – VVM): பள்ளி மாணவர்களுக்கான (6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை) ஒரு பெரிய அளவிலான ஆன்லைன் அறிவியல் திறமைத் தேடல் தேர்வு.
இந்தியா சர்வதேச அறிவியல் திருவிழா (India International Science Festival – IISF): அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மக்கள் மத்தியில் கொண்டாடும் ஒரு வருடாந்திர நிகழ்வு.
பாரதிய விஞ்ஞான் சம்மேளன் (Bharatiya Vigyan Sammelan – BVS): விஞ்ஞானிகளுக்கும் -பொதுமக்களுக்கும் இடையே தொடர்பை வளர்க்கும் இரு வருட நிகழ்ச்சி.
டெக்4சேவா (Tech4Seva): தொழில்நுட்பம் மற்றும் சமூக சேவையை இணைக்கும் முயற்சி.
சக்தி (Shakti): அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
விஞ்ஞான பாரதியின் தமிழகக் கிளை அறிவியல் சங்கம், தமிழ்நாடு என்ற பெயரில் இயங்குகிறது. மற்ற மாநிலங்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் சுதேசி அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவதிலும், பாரம்பரிய அறிவியலை நவீன அறிவியலுடன் ஒருங்கிணைப்பதிலும் இந்த அமைப்பு செயல்படுகிறது.
திட்டங்கள்:
1. Brilliant Bharath Hackathon – தெற்கு மற்றும் வடக்கு தமிழக அளவில் தமிழகத்தின் இரு பெரும் இடங்களில் கல்லூரி மாணவர்களின் புத்தாக்கத் திறத்தை உயர்த்திட நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வு.
2. அறிவியல் திருவிழா – பள்ளி கல்லூரி மாணவர்களின் அறிவியல் சார்ந்த சிந்தனையைத் தூண்டும் பேச்சுப்போட்டி, வினாடி வினா & ஆய்வுக்கட்டுரை சமர்பித்தல் / கட்டுரைப்போட்டி.
3. Ocean Olympiod & Coastal Cleaning – தேசிய கடல் தொழில்நுட்ப ஆராய்ச்சி (NIOT) நிறுவனத்துடன் இணைந்து, கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்ச்சி.
4. அணு யாத்ரா –- கல்பாக்கம் இந்திர காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் அணுமின்சக்தி உலைகள் கண்காட்சி. அணு விஞ்ஞானம் தொடர்பான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி-வினா போட்டிகள்

5. SPACE ON WHEELS – இஸ்ரோவின் சாதனைகளை விளக்கும் பேருந்து கண்காட்சி. பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிட சுற்றி வருகிறது.
6. வேலை வாய்ப்பு – அறிவியல் படித்தோருக்கான வேலை வாய்ப்பு வசதிகள் பற்றிய கருத்தரங்குகள்.
7. தேசிய அறிவியல் தமிழ் மாநாடு – கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்கள் அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை தமிழில் சமர்பிக்கும் மாநாடு.
8. சர். சி. வி. இராமன் பிறந்த நாள் விழா கட்டுரைப் போட்டி – கல்லூரி அளவில் போட்டிகள் நடத்தப்பெற்று வெற்றியாளர்கள் கல்பாக்கம் IGCARல் நடைபெறும் இறுதிப் போட்டிகளில் கலந்துகொள்ள மற்றும் அணுமின் நிலையத்தை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்படும்.
விஞ்ஞான பாரதி தேசிய அளவில் செயல்படுத்தும் முக்கியத் திட்டங்கள், தமிழ்நாடு கிளையிலும் மாநில மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன. இவற்றில் சில முக்கியமான திட்டங்கள்:
வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் (Vidyarthi Vigyan Manthan – VVM):
6 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களிடையே அறிவியல் திறனை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தூய அறிவியல் (Pure Science) மீது ஆர்வத்தை ஏற்படுத்துதல். பாரதத்தின் மிகப்பெரிய ஆன்லைன் அறிவியல் திறமைத் தேடல் தேர்வுகளில் ஒன்றாகும். மாணவர்கள் அறிவியல் பங்களிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், அறிவியல் வழிகாட்டிகளால் (Mentors) வழி நடத்தப்படவும் இது உதவுகிறது. தமிழ்நாட்டிலும் மாநில அளவில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் வெற்றி பெறும் மாணவர்கள், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் ISRO, CLRI, SERC, ICMR, CECRI போன்ற மத்திய அரசு ஆய்வகங்களைப் பார்வையிட அழைத்துச் செல்லப்படுவார்கள். தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டு முழுமைக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களும் மேலும் பல ஆய்வகங்களை பார்வையிடும் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
பாரம்பரிய அறிவியல் விழிப்புணர்வு:
பண்டைய பாரத விஞ்ஞானிகளின் பங்களிப்புகள் மற்றும் அறிவு அமைப்புகள் (Indian Knowledge Systems – IKS) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கருத்தரங்குகள், பயிலரங்கங்கள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல், மற்ற தேசிய திட்டங்களின் செயல்படுத்துதல்.
தேசிய அளவில் நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகளான சர்வதேச அறிவியல் திருவிழா – IISF, உலக கடல் அறிவியல் மாநாடு – WOSC, உலக வேத விஞ்ஞான சம்மேளனம் – VVVS மற்றும் பாரதிய விஞ்ஞான் சம்மேளன் – BVS போன்ற நிகழ்வுகளின் பங்கேற்க மாணவர்களை ஊக்கப்படுத்தி அழைத்துச் செல்கிறது.
கட்டுரையாளர்: முனைவர் மணி பிரகஸ்பதி,
மாநிலச் செயலாளர்,
அறிவியல் சங்கம், தமிழ்நாடு