ஒரு நண்பர் நீண்ட காலமாகத் திருமணம் செய்து கொள்ளாமலிருந்தார். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தல் அதிகமாயிற்று. கடைசியில் ஒரு நிபந்தனையுடன் இசைந்தார். தனக்கு மனைவியாக வரப்போகிறவள் தனது வருவாய்க்குள் செலவு செய்து சிக்கனமாக வாழக்கூடியவளாக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. ‘நான் ஒரு தேசியப் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். அந்தப் பணியில் எனக்காக ஒரு சிறுதொகைதான் ஒதுக்கப்பட முடியும். சம்பளம் அதிகம் கொடு என்று நான் கேட்க மாட்டேன்.
அந்த வருவாய்க்குள் செலவு செய்து மிச்சம் பிடித்து வருங்காலக் குழந்தைகளுக்காகச் சேமித்து வைக்கவேண்டும்’ என்று அவர் தன்னைத் திருமணம் கொள்ளவிருக்கும் அம்மையாரிடம் நிபந்தனை விதித்தார். அந்த அம்மையாரும் ஒப்புக்கொண்டு திருமணம் நடந்தது. இன்று அப்படியே வாழ்ந்து காட்டுகிறார்கள்.
சிக்கனமாக வாழ்வது கஞ்சதத்தனமல்ல. பணம் ஏராளமாக இருந்தால் ஊதாரியாக இருக்கவேண்டும் என்பது சரியல்ல. பணம் இல்லதாதவன்தான் சிக்கனமாக வாழவேண்டும் என்பதும் சரியல்ல. குழந்தைகளை அதிக கட்டணம் கொடுத்து கான்வென்ட் பள்ளிகளுக்கு அனுப்புகிறோம்.
அது ஒரு கெளரவச் சின்னம். தன் குழந்தை கான்வென்டில் படிப்பதாகப் பீற்றிக் கொள்வது ஒரு திருப்தி தருகிறது. அங்கு குழந்தைகள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதை பற்றிக் கவலைப்படுவதில்லை. பணக்காரப் பையணுடன் பழகும் நடுத்தரக் குடும்ப டாம்பீகத்தையும் ஊதாரித்தனத்தையும் ஒருவித நாத்திகத்தையும் கற்றுக்கொண்டு பெரியவன் ஆனவுடன் பெற்றோருக்குத் தீராத துயரத்தைத் தருகின்றான்.
சிறிய தலைவலி வந்தாலும் வைத்தியரிடம் ஓடுவது ஒரு கெளரவச் சின்னம். டாக்டரை இன்ஜெக் ஷன் போடச்சொல்லிக் கேட்பது ஒரு பழக்கம். வீட்டிலேயே சுலபமான நாட்டு மூலிகைகளால் பலவற்றைத் தீர்க்க முடியும். அதனால் பணச் செலவும் நேரச் செலவும் குறையும்.
நாம் மிச்சம் பிடிக்கும் பணம், நேரம், சக்தி, அறிவு, உணர்ச்சி ஆகியவற்றைத் தேசியப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். தேசிய சமுதாயப் பணிகளுக்கு வசதியும் வாய்ப்பும் இல்லையென்று குறைபட்டுக் கொள்கிறவர்கள், சிக்கனத்தைப் பழகினால் ஏராளமான நேரத்தையும், பொருளையும் பொதுப்பணிகளுக்காகத் தர முடியும். அந்நிலையில் நாமும் உயர்வோம்; நாடும் உயரும்