திரித்த செய்தி
சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் பொய் செய்தி வெளியிடும் நிறுவனங்களுக்கு வாய்ப் பூட்டு போடும் விதமாக, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இடதுசாரிகளின் கூச்சல் உச்சத்தை தொட்டதால், சட்ட திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காம்ரேடுகளின் திருவிளையாடல்களில் ஒன்று, பொய் செய்தியை இந்திய மீடியா மூலம் பரப்புவது. இந்த செயலுக்கு உடந்தையாக இருந்தவை டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, பி.டி.ஐ, ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மன், அமிர்த பஜார் பத்திரிகா, நேஷனல் ஹெரால்ட், பேட்ரியாட் போன்றவை.
1984 அக்டோபர் மாதம் 31ந் தேதி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த செய்தியை அமெரிக்காவுடன் முடிச்சுப்போட்டு வெளிட சோவியத் ரஷ்யா சூழ்ச்சி செய்தது. சி.ஐ.ஏ.வின் கருத்தால் உத்வேகம் பெற்றதாக இந்த கொலை அமைந்தது என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக, பனாமா குடியரசு தலைவரின் கொலை, லுமும்பா கொலை போன்ற கொலைகளை செய்ய தூண்டு கோலாக இருந்த சி.ஐ.ஏ. தான் இந்திராவின் கொலைக்கும் காரணம் என்று செய்தி பிரசுரிக்க இந்திய மீடியாக்களை காம்ரேடுகள் பயன்படுத்தினார்கள்.
கொலை நடந்த தினத்தன்று, கம்யூனிஸ்டு ரஷ்யாவின் ஆதரவு இதழ்களான தி பாம்பே டெய்லி, தி பேட்ரியாட் என்ற இரு பத்திரிகைகளும், இந்திரா கொலையுண்ட 30 நிமிடங்களில் அமெரிக்க அரசு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது எப்படி என்று கேட்டன. பேட்ரியாட், அமெரிக்கா இந்திரா காந்தியை பதவியிலிருந்து வெளியேற்ற செய்த சதியின் ஒரு திட்டம் என்ற தலைப்பில் எழுதியது. இந்த கட்டுரையை பின்பற்றி, ஹிந்துஸ்தான் டைம்ஸ், உச்ச நீதிமன்றத்தின் பெரும்பாலான வழக்கறிஞர்கள், அமெரிக்காவின் சதி திட்டத்தின் விளைவு இந்திரா காந்தி கொலை என அறிக்கை வெளியிட்டார்கள். இதை தொடர்ந்து அடுத்த இரு தினங்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவும், நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையும், சோவியத் யூனியனின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக கட்டுரைகளை பிரசுரித்தன. இம் மாதிரியான செய்திகள் தொடர்ந்து ஒரு மாத காலம் வெளியாகியது.
கொழுத்த மோசடி
வீடியோகான் நிறுவனத்திற்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.40,000 கோடி கடன் தந்தது உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய விவகாரங்களை ப.சிதம்பரம் அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஒரு கப் டீயின் விலையைப் பற்றி கவலையுடன் விவாதிக்கும் முன்னாள் நிதி அமைச்சர், வீடியோகோன் கடன் விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்?
2012-ம் ஆண்டு மத்தியில், மொசாம்பிக் எண்ணெய் – எரிவாயு திட்டத்திற்காக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியால் விடியோகான் குழுமத்திற்கு ரூ40,000 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 5 சதவீதக் கமிஷன் கறந்த நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிர்வாக சபை உறுப்பினரான சாந்தா கோச்சாரின் சகோதரர் ராஜீவ் கோச்சாருக்கு சொந்தமானது. இந்த முறைகேடு நடக்கும் போது நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இது மட்டுமில்லாமல், 2013-ல் எண்ணெய் ஒப்பந்தத்தில் ஊழல் செய்ய, காங்கிரஸ் அரசு, பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் (ஓ.என்.ஜி.சி) மூலம், வீடியோகானின் மொசாம்பிக் திட்டத்தில் 10 சதவீத பங்குகளை அதாவது சுமார் 700 கோடி டாலர் பங்குகள் வாங்க வைத்தது. இந்த முறைகேடு நடந்த போதும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். நிதி அமைச்சருக்கு நன்கு தெரியும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் துணை நிறுவனமாக ஐ.சி.ஐ.சி.ஐ லேம்பார்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய ஜவுளித் துறையின் சார்பாக ராஜீவ் காந்தி சில்பி ஸ்வாஸ்த்ய பீமா யோஜனா என்ற இன்சூரன்ஸ் திட்டத்தில் மோசடி செய்ததில் ரூ1,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. ராஜஸ்தான், மேற்கு வங்காளம், அசாம், உத்தரப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போலி நெசவாளர்களை சேர்த்து அவர்களின் பெயரில் லேம்பார்டு அடித்த கொள்ளையை பற்றி ப.சி வாய் திறக்கவில்லை.
தவித்த தொழில்
கடந்த சில வருடங்களாகவே வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி திட்டங்கள் மூலம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றன. மாறாக, மேற்கு வங்கமும் தமிழகமும் தொழில் வளர்ச்சியிலும், உள்கட்டமைப்பு வசதியிலும் பின்தங்கியிருக்கின்றன. தமிழகத்தில் புதிதாக துவங்கும் தொழில்களும், ஏற்கனவே நடக்கின்ற தொழில்களும் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு இடம் பெயர்கின்றன. காரணம்: அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கேட்கும் லஞ்சம்; தமிழகத்தில் முளைத்துள்ள பிரிவினைவாத, பயங்கரவாத சக்திகள். தென்கொரியாவிலிருந்து புதிதாக மோட்டார் தொழில் துவங்க முன் வந்த கியோ மோட்டர் தமிழகத்தில் தொடங்க முன்வந்து, பின்னர் துவங்காமல், ஆந்திர மாநிலம் மாவட்டத்தில் துவங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது ரூ40 லட்சம் லஞ்சம் கேட்டதால் ஏற்பட்ட விளைவு. கடந்த மூன்று வருடங்களாக தமிழகத்தில் புதிதாக துவங்கியுள்ள அரசியல் கட்சிகள் தமிழன் என்ற போர்வையில், பிரிவினைவாதத்தை முன்வைத்து போராட்ட களத்தை உருவாக்குவதால், வெளி நாட்டவர்கள் அல்லது வெளி மாநிலத்தவர்கள் தொழில் துவங்க அச்சப்படுகிறார்கள்.
தமிழகத்தை போலவே மேற்கு வங்காளத்திலும் 2010க்கு பின்னர் 8% சதவீதம் தொழில்கள் மூடப்பட்டன. மேற்கு வங்க முதல்வர் 2013-ல் ரூ1.12 லட்சம் கோடியில், சுமார் 3 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை அறிவித்தார். வெளிநாட்டு மூலதனம் வெறும் 312 கோடி மட்டுமே வந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அரசாங்கத்தின் கொள்கையும், இடதுசாரிகளின் இடையூறுகளும், பெருகி வரும் இஸ்லாமிய பயங்கரவாதமும் என தொழில் முதலீட்டார்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதற்கு மாறாக வடகிழக்கு எல்லைப் புற மாநிலங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் செழிக்கின்றன; கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு அங்கு போதிய நிதி ஓதுக்கீடு செய்ததால், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல தொழில்கள் அருணாசல பிரசேத்திற்கும், மணிப்பூர், சிக்கிமிகும் இடம் பெயர்ந்தன. 15 ரயில்வே திட்டங்களுக்கு ரூ90,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் விதமாக, ரயில், விமான சேவை, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டதால், ரூ.6.60 லட்சம் கோடி புதிய முதலீடுகள் அருணாசலப் பிரதேசத்திற்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பது, அந்த மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத, பயங்கரவாத நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இரும்பு கரம் கொண்டு அடக்குவதால் தான்.