ஹைதராபாத் பெருநகர மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றி, தெலங்கானா மாநிலத்திலும் அக்கட்சியின் வளர்ச்சிப்பாதையைக் காட்டி இருக்கிறது. 2016 மாநகராட்சித் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்டு 4 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, தற்போது 149 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது. அதன் வாக்கு விகிதமும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. மாறாக தெலுங்கு
தேசம் கட்சி 106 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.
நாட்டிலுள்ள பெருநகரங்களில் ஐதராபாத் முக்கியமானது. 625 சதுர கி.மீ பரப்பளவும் 74.67 லட்சம் வாக்களர்களும் கொண்ட மாபெரும் நகரம் இது. இதற்குள் 25 சட்டசபை தொகுதிகளும் 4 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. ஐதராபாத்தின் ‘ஓல்டு சிட்டி’ என்றழைக்கப்படும் பழைய நகரில் (சார்மினார் பகுதி) முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், ஐதராபாத் மாநகரின் தலைவிதியை இதுவரை இஸ்லாமியர்களின் வாக்குகளே தீர்மானித்து வந்தன. தற்போது அந்த நிலைக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது.
சென்ற முறை 99 இடங்களில் வென்று மாநகராட்சி மேயராக இருந்த தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) இம்முறை 149 இடங்களில் போட்டியிட்டு 55 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அதேபோல, 51 இடங்களில் மட்டுமே (முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதிகள்) போட்டியிட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 44 இடங்களில் வென்று மூன்றாமிடம் பிடித்துள்ளது. சென்ற முறையும் இதே இடங்களில் இக்கட்சி வெற்றி பெற்றிருந்தது. 146 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 2 இடங்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சென்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றிருந்த இடங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் அரசியல் மாற்றத்தின் திசை தெளிவாகவே தெரிகிறது. வெறும் 4 இடங்களில் வென்றிருந்த பாஜக தற்போது 48 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாகி உள்ளது.
மாநகராட்சியில் பெரும்பான்மை பெற 76 இடங்களில் வென்றாக வேண்டும். எனவே, மாநகராட்சியின் மேயர், துணை மேயர் பதவிகளை டி.ஆர்.எஸ். கட்சியும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மூலமாகப் பகிர்ந்துகொள்ளக் கூடும். சொல்லப்போனால், ஏ.ஐ.எம்.ஐ.எம். தேர்தலின் போதே, தாங்கள் போட்டியிடாத இடங்களில் டி.ஆர்.எஸ். கட்சியை மறைமுகமாக ஆதரித்தது. இவ்விரு கட்சிகளும் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்திருந்தால் பாஜகவின் வெற்றிவிகிதம் இன்னமும் அதிகமாக இருந்திருக்கும்.
முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக ஓட்டுப் போட்டதைப்போல ஹிந்துக்களும் வாக்களித்திருந்தால் பாஜக பெரும்பான்மை பெற்றிருக்கும். மாநகராட்சியை கைப்பற்றிருக்கும். ஐதராபாத் லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ள அசாதுதீன் ஒவைஸியின் கட்சிதான் ஏ.ஐ.எம்.ஐ.எம். அதீத மதவாதத்தால் ஐதராபாத்தை தனது கட்டுக்குள் வைத்திருந்த ஒவைஸியின் சாம்ராஜ்யத்துக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அக்கட்சியினர் துணை மேயர் பதவியைப் பெற்றாலும், மாநகராட்சியில் இனிமேல் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது.
நடந்து முடிந்த தேர்தலில் 34.50 லட்சம் வாக்காளர்கள் (46.55%) மட்டுமே வாக்குகளைப் பதிவு செய்தனர். அதிலும் ஒரு இடத்தில் முறைகேடு புகார் காரணமாக, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நிறுத்தப்பட்டது. மாநிலத்தை ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சி, இத்தேர்தலை ஒரு கௌரவப் பிரசனையாக கருதி பெருமளவில் செலவு செய்தது; வாக்காளர்களுக்கு கையூட்டும் தரப்பட்டது.
ஆயினும் அக்கட்சியால் முழு வெற்றி பெற முடியவில்லை. மாறாக, தனது அழுத்தமான- தெளிவான பிரசாரம், முறையான தேர்தல் பணிகள் மூலமாக, பாஜக தன்னை அங்கு நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. பாஜக தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பிரசாரங்களும், மாநில பாஜக தலைவரும் கரீம் நகர் எம்.பி.யுமான பண்டி சஞ்சய், தேசிய பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரின் வியூகங்களும் பாஜகவை வெற்றிக் கோட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளன.
மேலும், ஐதராபாத்தின் பழைய பெயரான பாக்யநகர் என்று பெயர் மாற்றப்படும் என்றும் பாஜக அறிவித்தது. இவையும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியினரின் அடாவடிக்கு எதிரான மக்களின் மனநிலையும் இணைந்து, பாஜகவை இரண்டாமிடத்துக்கு உயர்த்தி உள்ளன. பாஜக முன்னிறுத்திய மோடியின் வளர்ச்சி அரசியலுக்கும் இந்த வெற்றியில் பெரும் பங்குண்டு. வருங்காலத்தில் ஆந்திர மாநிலத்தில் டி.ஆர்.எஸ்.-, பாஜக என்ற இருமுனைப்போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. தேசத்தில் மாறிவரும் அரசியல் மாற்றத்தில் தெலங்கானா பங்கெடுக்கத் துவங்கிவிட்டது நன்றாகவே தெரிகிறது