திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்தார் அன்றைய முதற்குடிமகன். அடியவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொல்லை தர விரும்பாமல் விடியற்காலை வைகறைப் பூஜையில் கலந்து கொண்டார். தேசத்தின் அதிபருக்கு அளிக்கப்படும் மரியாதைகளுடன் ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார். தயங்கி நிற்கிறார். அனைவரும் அதை மறந்துவிட, எங்கே அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்” என்று மென்மையாக கேட்டு வாங்கிக் கொள்கிறார். வேற்று மதத்தினராய் இருப்பதால், அதில், ‘ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் ஏற்படாமல் இறை தரிசனம் செய்ய விழைகிறேன்’ என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார் அணு விஞ்ஞானியான ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம்.
திருவேங்கட முடையானிடம் என்ன வேண்டினாரோ எப்படி வழிபட்டாரோ அறியோம்! சுமார் பத்து நிமிடங்கள் ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு முடித்துக்கொண்டு தீர்த்தமும் சடாரியும் பெற்றுக்கொண்டு, வலம்வந்த கலாம், உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார். அருகே ரங்கநாயக மண்டபத்தில் கோயில் அலுவலர்கள் மரியாதை செய்யக் காத்திருக்கிறார்கள். லட்டு/வடை பிரசாதமும் வஸ்திரம் என்கிற பட்டுத் துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள். பெற்றுக்கொண்ட கலாம், அர்ச்சகரை அருகில் அழைத்து, வேத ஆசிர்வாத வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே! அதை ஓதி வாழ்த்தும்போது, நமது பாரத தேசத்திற்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன்” என்று கேட்டுக் கொண்டார்.
தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுகின்ற இக்காலத்தில் தேசத்திற்காக பிரார்த்தனை செய்பவர் பண்பு உயர்ந்ததல்லவோ!
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்