தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த 14 பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு துப்பாக்கி, வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவர்களில் மூன்று பயங்கரவாதிகளை 10 நாட்கள் காவலில் எடுத்து ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2013ல் பா.ஜ. மற்றும் ஹிந்து முன்னணி பிரமுகர்கள் வேலுார் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ், மதுரை பால்காரர் சுரேஷ் என அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தன. இது தொடர்பாக அல் உம்மா பயங்கரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ‘புனித போர்’ என பெயரிட்டு ஹிந்து தலைவர்களை கொலை செய்து வந்தது தெரிய வந்தது. அதன்பின் 2014ல் சென்னை அம்பத்துாரில் ஹிந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் 48, கொல்லப்பட்டார். மர்ம நபர்கள் இவரது வாய் மற்றும் நெஞ்சை பிளந்து அதில் மண்ணை போட்டுச் சென்றனர்.
இந்த கொலை தொடர்பாக சென்னை, கடலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயங்கரவாதிகள் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சையது அலி நவாஸ் 25; அப்துல் சமீம் 25; காஜா மொய்தீன் 47 ஆகியோர் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாகினர். இவர்களை ‘கியூ’ பிரிவு போலீசார் தேடி வந்தனர். மேலும் இவர்களது கூட்டாளிகள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கியூ பிரிவு போலீசார் பயங்கரவாதிகள் முகமது ஹனீப் கான் 24; இம்ரான் கான் 32; முகமது ஜெயித் 24 ஆகியோரை 7ம் தேதி கைது செய்தனர்.
மூவரையும் நேற்று 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முகமது ஜெயித் பி.டெக். படித்துள்ளார். இவர் பயங்கரவாதிகளின் தகவல் தொடர்புக்கு என பிரத்யேக ‘சாப்ட்வேர்’ தயாரித்துள்ளார். மேலும் இவர்கள் உட்பட 14 பயங்கரவாதிகள் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த தகவலும் தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் டில்லியில் பதுங்கி இருந்த சையத் அலி நவாஸ்; அப்துல் சமீம்; காஜா மொய்தீன் ஆகியோரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
அதேபோல குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் பதுங்கியிருந்த கடலுார் மாவட்டத்தை சேர்ந்த பயங்கரவாதி ஜாபர் அலி என்பவரையும் அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் 57, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை நேரில் பார்த்த களியக்காவிளை காவல் நிலைய எஸ்.ஐ. ரகுபதி புகார் அளித்துள்ளார். வில்சன் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்த பின் சோதனை சாவடி அருகே உள்ள மசூதியின் சுவர் ஏறி குதித்து ஓட்டமும் பின் நடையுமாக சிரித்தபடி செல்வது பதிவாகி உள்ளது. இருவரும் நாகர்கோவில் இடலாக்குடியைச் சேர்ந்த தவுபிக் 27; திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் 29, என்பது தெரிய வந்தது.
இவர்களும் பெங்களூரு, டில்லி மற்றும் குஜராத்தில் கைது செய்யப்பட்டவர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. தங்கள் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதால் தவுபிக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் வில்சனை சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரால் ஆட்டி வைக்கப்படுபவர்கள். அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு ஐ.எஸ். இயக்கம் குறி வைத்துள்ளது. தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு பலன் அளிக்காததால் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகளின் பட்டியலில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம், வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. முதல் தாக்குதலை கேரளாவில் நிகழ்த்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வாறு கூறினர்.
மூவரிடம் கிடுக்கிப்பிடி!
தென் மண்டல ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில், ”எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, குற்றவாளிகளை, தமிழகம் மற்றும் கேரள மாநில போலீசார் இணைந்து தேடி வருகிறோம். விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது; அதற்கு தகுந்த பலனும் கிடைத்துள்ளது,” என்றார்.
இதற்கிடையே, கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் பதுங்கியிருந்த, தமிழகத்தைச் சேர்ந்த அப்பாஸ் மற்றும் சையது; திருவனந்தபுரம் பூத்துறையைச் சேர்ந்த ரபீக் ஆகியோர் சிக்கியுள்ளனர். இவர்களிடம், இரு மாநில போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.