கேரளாவில் உள்ள தொன்மையான சிவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது கல்பாத்தி கிராமத்தில் உள்ள கல்பாத்தி விஸ்வநாத சுவாமி ஆலயம். இந்த சிவன் கோயிலின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அது பல நூறு வருடங்கள் என்கின்ற பழமை வாய்ந்த பெருமை என்று வியக்கும் அளவுக்கு நம்மை அழைத்துச் சென்று விடும். இந்தக் கோயில் தென்னிந்திய கலாச்சார வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பதால் ‘தென்னிந்தியாவின் வாரணாசி’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற கோயில் திருவிழாக்களில் ஒன்றான கல்பாத்தி ரதோத் சவம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. அப்போது அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு வீதியில் பவனி வரும் தேர்கள் காண்போரை அப்படியே சொக்க வைத்து விடும்.
இத்தேர்த்திருவிழா பாலக்காடு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்களை ஈர்ப்பதோடு இந்தப் பகுதியின் சுற்றுலாத் துறை வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி வருகிறது.கல்பாத்தி கோயிலக்கு அருகில் அந்தணர்கள் வாழும் அஹ்ரகாரங்கள் நிறைய அமைந்திருக்கின்றன. தொன்று தொட்டு இவர்கள் வாழும் இந்த அஹ்ரகாரங்கள் கேரள சுற்றுலாத் துறையால் ‘பாரம்பரிய பாதுகாப்பு திட்டத்தின்’ கீழ் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகின்றன. பழைய கல்பாத்தி புதிய கல்பாத்தி சாத்தாபுரம் கோவிந்தராஜபுரம் போன்றவை முக்கிய கிராமங்கள்.