ஐயப்பன் விரத விதிமுறைகள் பற்றி தெரியுமா

சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை மாத பூஜைகளுக்காக வருகிற 16ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பூஜையின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதியும், ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

பலபேர் புதியதாக மாலை போடுபவர்களாகவும் இருப்பார்கள். சபரிமலை செல்ல ஐயப்பன் விரத விதிமுறைகள் எப்படி மேற்கொள்ள வேண்டும்?

ஐயப்பன் விரத விதிமுறைகள் :

  • முதன்முறை மாலை அணியும் பக்தர்களை கன்னி சுவாமி என அழைப்பார்கள்.
  • ஐந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்ற ஒருவரை குரு சுவாமியாய் ஏற்று தாய், தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும்.
  • அவரவர் வசதிக்கேற்ப குருவிற்கு தட்சணை கொடுத்து குருவின் அனுக்கிரகத்தை பெறுதல் வேண்டும். கொடுக்கும் தட்சணை ஒரு ரூபாய் ஆனாலும் குரு, ஐயப்பனே தந்ததாக அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • கார்த்திகை 1ம் தேதி மாலையணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும். காலை உணவை விடுத்து மதிய உணவை ஐயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ணவேண்டும். மாலை பால், பழம் உண்ணலாம்.
  • விரதக்காலத்தில் மிக பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்கக்கூடாது. திருமணமானவர்கள் தாம்பத்திய வாழ்வில் (இந்த நாட்களில்) ஈடுபடக்கூடாது. மனதால் ஐயப்பனை மட்டும் நினைத்து அவன் பாதத்தை சரணடைய வேண்டும்.
  • ருத்ராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி, அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.
  • விரதக்காலத்தில் கருப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணிய வேண்டும். கன்னி சுவாமிகள் கருப்பு மட்டும் தான் அணிய வேண்டும்.
  • காலை, மாலை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு ஐயப்பனிற்கு துளசி, பால், பழம், கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபட வேண்டும்.
  • விரதக்காலத்தில் முடிவெட்டி கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் கூடாது. காலணியை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், பொய் பேசுதல், மாமிசம் உண்ணுதல், கோபம் கொள்ளுதல், கடும் சொற்கள் பேசுதல் கூடாது.
  • விரதக்காலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும், பேசி முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்றே கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாகும் முன்னர் அதை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது. நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும். பின்னர் மறுவருடம் தான் மாலை அணிய வேண்டும்.
  • விரதக்காலத்தில் பகலில் தூங்கக்கூடாது. இரவில் பாய், தலையணை போன்றவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும்

                                                                                                                                       – A S கோவிந்தராஜன்