விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஒரு அங்கமான, அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில், மதுரை பரவை ஆகாஷ் கிளப் மஹாலில், இரண்டு நாள் துறவியர் மாநாடு நேற்று துவங்கியது. ராமகிருஷ்ண மடம், சின்மயா மிஷன், ஆதீனங்கள் உள்ளிட்ட ஆன்மீக அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான துறவியர் பெருமக்கள் இதில் கலந்து கொண்டனர். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் துவக்க உரையாற்றினார். வி.ஹெச்.பி அகில உலக இணைப் பொதுச்செயலர் ஸ்தாணுமலையான் தலைமை உரையாற்றினார். இம்மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், “கோயிலை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என போராட்டம் நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதி பூச மறுக்கின்றனர். கோயில் சொத்துகளுக்கு குத்தகை, வாடகை முறையாக வருவதில்லை. இதைபற்றி பேசினால் இடையூறு செய்கிறீர்களா என கேட்கின்றனர். ஆதீனம் என்றால், பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ரா அடிக்க முடியாது. ஹிந்துக்களுக்கு ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும். இதையெல்லாம் பேசியதால் தான், பிரதமரிடம் நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என்று பேசினார். பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், “மதமாற்றத்தை தடுக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தனித்து இயங்கும் வாரியத்தின் கீழ் கோயிலை கொண்டு வர வேண்டும்” என்றார். மாநாட்டில் வி.ஹெச்.பி., அகில உலக பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே, “அயோத்தி ஸ்ரிராமர் கோயில் கட்டுமான குழு பொருளாளர் கோவிந்தகிரி மகராஜ், டிரஸ்ட் உறுப்பினர் உடுப்பி விஸ்வபிரசன்ன தீர்த்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதமாற்றத்தை தடுப்பது; தாய் மதத்திற்கு திரும்புவோரை ஊக்குவிப்பது; கிராமங்களில் துறவியர் தங்கி தொண்டாற்றி ஏற்றத்தாழ்வுகளை போக்குவது குறித்து மாநாட்டில் பேசப்படும். இன்று மாலை 5 மணியளவில் பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில், வி.ஹெச்.பி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.