திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோயிலை நிர்வகிக்கும் உரிமையும் அதிகாரமும், திருவீதாம்கூர் ராஜகுடும்பத்திற்கே வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பினை, அரச குடும்பத்தினருடன் கோடிக்கணக்கான பத்மநாப பக்தர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். “பக்தர்களுக்கு பத்மநாபன் அருளிய ஆசியாக இந்த தீர்ப்பினை கருதுவதாக” அரச குடும்பத்தை சேர்ந்த அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய், ஆனந்த கண்ணீருடன் கூறினார். சிதம்பரம் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயில் ஆகிய கோயில்களிலும் ஹிந்துக்களின் நம்பிக்கை களுக்கும், காலம் காலமாக பின்பற்றி வருகின்ற ஆச்சார அனுஷ்டானங்களுக்கும் மிகுந்த மரியாதை அளிக்க
வேண்டியதன் அவசியத்தை உச்சநீதிமன்றம் அழுத்தமாக வலியுறுத்தியிருந்ததை நாம் பார்த்திருக்கின்றோம்.
பத்மநாப சுவாமி கோயிலையும், அதன் ரகசிய அறைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்ற லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும் கைப்பற்றும் நோக்குடன் கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசும் அவர்களுக்கு உடந்தையாக முஸ்லீம் லீகினரும் போட்ட சதித் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு எல்லா சமஸ்தானங்களும் இந்தியா குடியரசுடன் இணைந்து விட்டபொழுது, 49-ம் ஆண்டு அன்றைய மன்னர் சித்திரை திருநாள் பாலராம வர்மா அவர்களுக்கும், மத்திய அரசிற்கும் இடையினில் ஒரு ஒப்பந்தம் (covenant) ஏற்படுகின்றது. அந்த ஒப்பந்தத்தின் ஏழாவது பிரிவில், பத்மநாப சுவாமி திருக்கோயிலின் நிர்வாகத்தை, அவரால் நியமனம் செய்கின்ற ஒரு நிர்வாகக்குழு கவனித்து பராமரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட அந்த மன்னர் 1991-ம் ஆண்டு காலமாகி விட்டார்.
2006-2011 காலங்களில் கேரளாவை ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் கோயில்நிர்வாகத்தில் தலையிட ஆரம்பித்தார்கள். ஒரு கோவில் அழிந்து விட்டால் அந்த கோவிலை சேர்ந்தவர்களின் மூட நம்பிக்கையும் அழிந்து விடும் என்றும், கோவில்களை இடித்து விட்டு அவ்விடத்தில் குச்சிக்கிழங்கு பயிரிட வேண்டும் என்று கூறிய கம்யூனிஸ்டுகள், ஆலய ஆட்சியில் பிரவேசிக்க வேண்டுமென்று துடித்தார்கள். மிகுந்த சொத்துக்களுடைய தலைநகரத்திலேயே உள்ள பத்மநாப சுவாமி கோயிலை கைப்பற்ற அவர்கள் திட்டம் வகுத்தனர். கோவில் நிர்வாகம் சீரழிந்து விட்டதாகவும், கோவிலில் இருந்த சொத்துக்கள் திருட்டு போகின்றது என்றும் ஒரு புகார்
முதலமைச்சருக்கு கிடைக்க வகை செய்தனர்! உடனே அறநிலை துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் முதன்மை செயலர்கள் ஆகியோர்கள் ஒன்றாக கூட்டம் போடுகிறார்கள்! கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பினை அரசு நேரடியாக கவனிக்கும் என்று அறிவிக்கிறார்கள். அரச குடும்பத்தினர்கள் மீது அபாண்ட பொய் குற்றச்சாட்டுகள் பரப்பினார்கள். அத்துடன், சித்திரை திருநாள் பாலராமவர்மா காலமாகி விட்டதால், அவர் கையெழுத்து போட்ட ஒப்பந்தமும் காலாவதியாகி விட்டது என்ற விதண்டா வாதத்தையும் முன்வைத்தார்கள் ! ஆகவே, இனி மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தான், அந்த கோவிலுக்கும் அதன் சொத்துக்களுக்கும் சொந்தக்காரர்கள் என்ற வகையில் ஆலயத்தை கைப்பற்ற முயற்சித்தனர். அதற்காக ஆலயத்தை நிர்வகிக்க ஒரு குழுவை நியமனம் செய்தனர்!
திருவிதாம்கூர் அரச குடும்பத்தின் அப்போதைய மன்னராகவும், கோவில் அறங்காவலராகவும் இருந்த உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மற்றும் பத்மநாப பக்தர்களில் சிலரும், அரசின் அநியாய நடவடிக்கையை எதிர்த்து திமன்றத்தை நாடினார்கள். 2007-ம் ஆண்டு திருவனந்தபுரம் துணை நீதிமன்றத்திலும், 2008-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்திலும் மாநில அரசு தமக்கு சாதகமான தீர்ப்பினை பெற்றுக் கொண்டார்கள். கேரளா உயர் நீதி மன்றத்திலும் மாநில அரசிற்கு அனுகூலமான தீர்ப்பு வந்ததை தொடர்ந்து, 2011-ம் ஆண்டு மேல் முறையீட்டிற்க்காக உச்சநீதிமன்றத்திற்கு சென்றார்கள். 2011 ல் இருந்து அந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. குருவாயூர் கோயிலை போன்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஒரு நிர்வாக குழுவை அமைக்க வேண்டும் என்பதே கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த கருத்தாகும். ஆனால் ,திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலிலிருந்து மட்டுமல்ல, அரசு கைவசப்படுத்தி வைத்திருக்கின்ற எல்லா கோயில்களிலிருந்தும் அரசு வெளியேற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினை உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு, மறைமுகமாக வலியுறுத்துகின்றது. சமீபத்தில் அதிகார பலம் கொண்டு குருவாயூர் பார்த்தசாரதி கோவிலுக்குள் நுழைந்த
செயலுக்கும், கோவில்களில் மத சம்பந்தமான ஆன்மீக வகுப்புகளை நடத்தக்கூடாது என்ற அரசு ஆணைக்கும் தடை போட வலுவானது, இந்த தீர்ப்பு!
ஒரு அரசருக்கும் மத்திய அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தமானது, சம்பந்தப்பட்ட அரசர் இறந்து விட்டது என்ற காரணத்தால் செல்லாதாகி விடாது. அதற்க்கு இன்றைக்கும் உரிய முக்கியத்துவமும் சட்ட ரீதியான பாதுகாப்பும் உள்ளது. அவருடைய வாரிசுகளுக்கு அந்த ஒப்பந்த அடிப்படையிலான உரிமையும் அதிகாரமும் வழங்கியாக வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் ஜூலை 13 திங்கட்கிழமை தெள்ள தெளிவாக தெரிவித்து விட்டது!.. அரசர் என்பவர் ஒரு தனி மனிதனல்ல, ஒரு பிரதேசத்தில் வசிக்கின்ற வம்சாவளியினரின் பிரதி நிதியாக திகழ கூடியவர் என்றே உச்சநீதிமன்றம் கருதுகின்றது. இந்த தீர்ப்பின் மூலம் சபரிமலை சம்பந்தமான வழக்கிலும் நல்லதொரு தீர்ப்பினை கண்டிப்பாக நாம் எதிர்பார்க்க முடியும். அத்துடன் கேரளாவில் உள்ள தேவஸ்வம் போர்டு என்ற அரசாங்க அதிகார கேந்திரங்கள் ஒழிக்கப்பட இந்த தீர்ப்பு வகை செய்யும் என்றே சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என கடந்த பல ஆண்டுகளாக ஹிந்து இயக்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றோம். இத் தீர்ப்பானது அந்த வெற்றி இலக்கினை நோக்கியுள்ள பயணத்தில் ஒருமைல் கல்லாக அமைந்து விட்டது. ஆலயங்களை பொறுத்த வரை, சம்பந்தப்பட்ட அந்த ஆலயத்தின் மீதும், பிரதிஷ்டிக்கப்பட்ட மூர்த்தி மீதும், நம்பிக்கை கொண்ட ஹிந்துக்களாகிய பக்தர்களே நிர்வகிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பத்மநாபா சுவாமி கோயிலையும் கடந்து, நாடு முழுவதும் உள்ள கோயில்கலின் ஆட்சி அதிகாரத்தினை தக்க வைத்துக் கொண்டிருக்கும் செக்குலர் அரசோ, அல்லது அரசால் நியமிக்கப்பட்ட அரசு பிரதிநிதியோ, அந்தந்த கோயில்களிலிருந்து வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தை இத் தீர்ப்பு ஏற்படுத்தும். ஆலயங்களை விட்டு அரசும் அரசியல் கட்சியும் வெளியேற வேண்டுமென்று கே.பி.சங்கரன் நாயர் கமிஷன், குட்டி கிருஷ்ண மேனன் கமிஷன் போன்ற கமிஷன்கள் முன்வைத்த பரிந்துரைகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த தீர்ப்பினை கருத வேண்டும். ஆன்மீக செம்மல்களாலும் இறை நம்பிக்கை கொண்ட பக்தர்களாலும் ஆலயங்கள் நிர்வகித்து பராமரிக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்படுத்துவதற்கு தகுந்த வகையில் பாதையை தெளிவாக்கி அமைத்து தந்ததுள்ளது உச்ச நீதிமன்றம்!