மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்தான் திருவிக்கிரமன். அவனது நாமங்களைப் பாடி நாம் நோன்பு இருந்து நீராடி அவனை வழிபட்டால் பெரும் நீங்காத செல்வங்கள் எவை எவை ? நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கும். அவற்றின் ஊடாகத் தேங்கி நிற்கும் நீரில் கயல் மீன்கள் துள்ளி விளையாடும். தேன் நிறைந்த அழகிய குவளை பூக்களில் வண்டுகள் தேனைப் பருகுவதற்காக மயங்கி கிடக்கும்.
அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள்கூட தங்கள் கன்றுகளுக்கு ஊட்டியது போகக் கறப்பவர்களுக்கும் அவர்களுடைய குடங்கள் நிறையும்படி பால் அமுதைப் பொழியுமாம். கிருஷ்ண பக்தியானது இப்படியான வளங்களை நமக்குத் தரும்.
“நீங்காத செல்வம்” என்று குறிப்பிடுவது பொருளியல் சார்ந்த சுகபோகங்கள் மட்டுமல்ல, நிறைவானதும் அதற்க்கு மேல் எதுவுமே இல்லாததுமான பகவான் கோவிந்தனின் திருவடிகள் என்னும் செல்வத்தையே.