திருப்பாவை – 22

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,
எங்கள் மேல் சாபம் இழிந்து — ஏலோர் எம்பாவாய்.

விளக்கம்:
அழகியதும் அகன்றதும் ஆகிய பரந்த இந்த உலகத்தில் உள்ள பல அரசர்கள், தங்களது
அகங்காரம் நீங்கி, உனது கருணைமிகு பார்வைக்கு ஏங்கியவர்களாய், உனது கட்டிலுக்கு
கீழே, கூட்டமாக குழுமி இருக்கின்றார்கள். அவர்களைப்போல, நாங்களும் உன்னை நெ ருங்கி
வந்துள்ளோம். உனது கடைக்கண் பார்வை எங்கள் மீது படாதா என்று ஏங்கி
காத்திருக்கின்றோம். கிண்கிணி மணியின்
வாயில் பொறிக்கப்பட்டு இருக்கும் தாமரை மலர் போன்றதும் செம்மையான வர்ணத்தில்
உடையதும் ஆன உனது கவின்மிகு கண்களை சிறிது சிறிதாக மலரச்செய்து எங்களை நீ
பார்க்க மாட்டாயா??!!சந்திரனும் கதிரவனும் வானிலிருந்து எழுவது போன்று
ஒளிக்கற்றைகளை வீசும் உனது கண்கள் கொண்டு, எங்களை நீ நோக்கினால், வினைகளால்
எங்கள் மீது படர்ந்துள்ள சாபங்கள் நீங்கும் எனது தோழிகள் கண்ணனிடம் வேண்டுகோள்
விடுக்கிறார்கள்.