‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று கொண்டாடப்படும் அளவுக்கு மார்கழி பெற்றிருக்கும் சிறப்பு என்ன? நாளின் துவக்கமான பிரம்ம முகூர்த்தம் போன்றது வருடத்திற்கு மார்கழி மாதம். தேவர்களுக்கு தை முதல் ஆணி முடிய பகல் காலம். அப்பகலுக்கு விடியற்காலம் மார்கழி. பகவான் கிருஷ்ணனும் மாதங்களில் நான் மார்கழி என்கிறான். கரிய மேனிக்கு எடுப்பான மாற்று நிறமான சிவப்பான திருக்கண்களை உடைய கண்ணனே நமக்கு கைங்கர்யமென்னும் புருஷார்த்ததை அவன் கொடுக்க நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் (பறை தருவான்). நோன்பிலே நுழைந்து திளைத்து மார்கழி நோன்பின் அடையாளங்களில் முதல் கடமையான நீராட வாருங்களேன் என்று இந்நோன்புக்கு உண்டான காலத்தைக் கொண்டாடுகிறார்கள் தோழிமார்.
துயில் கலையாத பெண்கள், பனியோடு அவர்களை எழுப்பும் நேரிழையீர் என்ற கனிவுக் குரல், சில நேரங்களில் அந்தக் குரலில் வெளிப்படும் கேலி, பாசாங்கான கோபம், வியப்பு, துயில் எழுந்து நந்தகோபனைப் பாடி நோன்பு நோற்றால் தங்களது இலக்கிற்குக் கிடைக்கப்போகும் வெற்றியாக 108வது திவ்யதேச நாயகன் நாராயணனின் பறை கிட்டுமென உறுதிபட கூறுகிறாள் ஆண்டாள்.