கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
இயற்கை வளங்கள் நமக்கு அளித்துள்ள பல நிமித்தங்களை நேரிடையாகவே கூறி தோழியைத் துயில் கலைந்து எழுமாறு ஆறு, ஏழு பாசுரங்களில் வேண்டுகோள் விடுத்த ஆண்டாள், எட்டாம் பாசுரத்தில் “நம் தேவைகளை நாம் கூறாமலேயே ஆராய்ந்து அறிந்து நமக்கு இரங்குவான் கண்ணன்; அவனைக் காணச் செல்வோம்… எழுவாயாக” என்று துயிலெழுப்புகிறாள்.
கிழக்குத் திசையில் சூரியன் ஒளி பரப்ப யத்தனிக்கிறான்.எனவே கிழக்கு வானம் வெளுத்தது. எருமைகள் புல்லை மேய்வதற்காக சிறு வயல் தோட்டங்களில் புகுந்தன.தத்தம் பணிக்குச் செல்லாதபடிக்கு, மற்றுமுள்ள எல்லாப் பெண்பிள்ளைகளையும் போகவிடாமல் தடுத்து, உன்னை கூப்பிட்டு அழைப்பதற்காகவே உன் வீட்டு வாசலில் வைத்திருக்கின்றோம்.
கண்ணனாலே மிகவும் விரும்பத்தக்க, ஒரு பதுமையை ஒத்த பெண்ணே !! எங்களுடன் வருவதற்காக நீ எழுந்திரு. கண்ணனின் குணங்களைப் பாடி, அவனிடம் இருந்து நாம் விரும்பும் பறையைப் பெற்றுப் பாவைநோன்பு இயற்றுவோம்…குதிரை உருவம் எடுத்து வந்த கேசி என்னும் அசுரனுடைய வாயைப் பிளந்தவன் கண்ணன்.
கம்சனால் அனுப்பப்பட்ட வலிமையிற் பெரிய மல்லர்களை இறக்குமாறு செய்தவன் அவன். அந்த தேவாதி தேவனை நாம் அடி பணிந்தால், நமக்காக இரங்கி அருள் புரிவான்,’.