கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
விளக்கம்
அதிகாலை நேரம் குயில் கூவித் துயில் எழுப்பும், கோழிகள் கொக்கரக்கோ எனக் கத்தும்.
பிற பறவைகளும் இவ்வாறு ஒலி எழுப்ப, ருப்பெருந்துறையில் கோயில்களிலும்
இல்லங்களிலும் எம்பெருமானின் காலை வழிபாட்டுக்கான சங்கங்கள் ஆர்ப்பரித்தன.
விண்ணிலே நக்ஷத்திரங்களின்(தாரகை) ஒளி மங்கி உதய காலத்து அருணோதயத்தைத்
தொடர்ந்து கதிரவனின் ஒளி ஒளிரத் தொடங்குகிறது. இந்நிலையில் இவ்வுலக
வாழ்க்கையில் பற்றுகொண்டிருந்த நாங்கள் பரமேஸ்வரனாகிய உன்னிடம் அளவற்ற
விருப்பும், பக்தியும் கொண்டிருக்கிறோம். எங்கள் ஈசனே. திருப்பெருந்துறையில் உறையும்
எங்கள் தலைவனே, எங்களின் இந்த பக்தியைக் கண்டு எங்கள் மேல் அன்பு காட்டி எம்மை
ஆட்கொள்ள உன் திருவடித் தாமரைகளை எங்களுக்குக் காட்டுவாய் !! அடியார்கள்
மட்டுமே அறியக் கூடிய தன்மை கொண்டவனே, எமக்கு என்றும் எளியவனாக
இருப்பவனே!!உனது அருள் அநுபவம் பெற்றால்தான் மனத்தாலும் அறிவாலும்
உன்னை அநுபவித்து நாங்கள் உணர முடியும். அத்தகைய சிவா னுபவத்தை
எங்களுக்குக் கொடுத்து எங்களை ஆட்கொண்டு அருள் புரிவாய்!!