திம்மக்காவின் திடமான எண்ணம் இன்று உருப்பெற்று உள்ளது.

கர்நாடகாவின் ஒரு குக்கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த திம்மக்காவுக்கு, 16 வயதில் சிக்கையாவுடன் திருமணமானது. 10 வருடங்களாக குழந்தைகள் இல்லை. தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தபோது, அவர் மனதில் ‘வயிற்றில் சுமப்பதுதான் குழந்தையா, பிரதிபலனின்றி நம் தேவைகளை நிறைவேற்றும் இயற்கை நம் பிள்ளையாகாதா’ என்ற எண்ணம் உதித்தது.

முதலில் தன் கிராமத்திலேயே ஒரு ஆலம் கன்று நட்டிருக்கிறார். அது வளர்ந்து மரமாக பார்க்கையில் ஆனந்தம் அடைந்தார். பின்னர் கணவருடன் இணைந்து பல இடங்களில் ஆலமரங்கள் வளர்த்தார். பஞ்ச காலத்தில் கூட பல மைல்கள் நடந்து சென்று, பானைகளில்  நீர் சுமந்து தண்ணீர் ஊற்றி மரங்களை வளர்த்துள்ளார்.

கணவரை இழந்த பின்பும் கூட மரம் நடும் பணிகளைத் தொடர்ந்தார். சாலையின் இரு பக்கமும் 400 ஆலமரங்கள் நட்டதுடன் தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான மரங்களை ஒரே ஆளாக நட்டு பொட்டல்காடான தன் ஊரை பசுஞ்சோலையாக மாற்றியிருக்கிறார் திம்மக்கா.  தன் 108 வயதிலும் உற்சாகம் குறையாமல், மரங்களை நேசிக்கும் இவர் பல இயற்கை ஆர்வலர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்.

பத்மஸ்ரீ விருது, ராஜ்யோத்சவா உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள திம்மக்காவை 2016-ல் பி.பி.சி உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக குறிப்பிட்டிருந்தது. சில தினங்களுக்கு முன் கர்நாடக மத்திய பல்கலைக் கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.