திமுகவினரே மது உற்பத்தி செய்வதால், மதுக் கடைகளை திமுக அரசு மூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். ஈரோடு மாவட்டம் பவானியில் நேற்று ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையைத் தொடங்கிய அண்ணாமலை, மேட்டூர் சாலையில் யாத்திரையை நிறைவு செய்தார். அந்தியூர் பிரிவு பகுதியில் பொதுமக்களிடம் அவர் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில் அணைகள் கட்டப்பட்டன. ஆனால், திமுக அரசுமதுக்கடைகளை மட்டும் திறந்து வருகிறது. திமுகவினரே மது உற்பத்தி செய்வதால், மதுக்கடைகளை மூட மாட்டார்கள்.
திமுக தலைவரின் மகள் என்பதால்தான் கனிமொழிக்கு எம்.பி.பதவி கிடைத்தது. ஆனால், மற்ற பெண்களுக்கு திமுகவில் பதவி கிடைக்காது. சாதாரண பெண்களும் எம்.பி., எம்எல்ஏ-வாக வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் மோடி 33 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
தமிழகத்தில் பட்டாசு விபத்துகள் தொடர்ந்து நேரிடுவது வேதனை அளிக்கிறது. இந்தஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, கடந்த மாதம்தான் பட்டாசு தயாரிப்பு தொடங்கியது. சீன பட்டாசுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 9 லட்சம் தொழிலாளர்களின் நலன்கருதி, பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். ஆனால், நமது கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில், ஆண்டுக்கு ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் அரசு அனுமதிக்க வேண்டும். அதில் அரசியல் உள்நோக்கம் கூடாது. தமிழகத்தில் கடந்த 20ஆண்டுகளாக பல பெரிய நடிகர்களின் படங்களுக்கு இடையூறுசெய்யப்பட்டுள்ளது. லியோதிரைப்பட வெளியீடு விவகாரத்தில், அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.