“திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் நாடு (கண்டம்) விட்டு நாடு (கண்டம்) புலம்பெயர்தல் உலகப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல். அதனைக் கண்டும் காணாமல் இருப்பது, இன்னும் மேலே போய் ஆதரிப்பது எல்லாம் முற்போக்கு செயலே அல்ல”. இப்படிச் சொன்னவர் பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் காரர் அல்ல. ஏம்பா இடதுகளே, உங்களுடன் பயணிக்கும் ஊடகங்களே, நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள்; நிதானப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தான் இந்த முத்துக்களை உதிர்த்தார்! தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் ஸ்டார்மர் ஜெயித்தபோது உங்களுக்கு அன்று உச்சி குளிர்ந்து போயிற்றே?
சமீபத்தில் (மார்ச் 31), பிரிட்டனின் முன்னெடுப்பில் ‘திட்டமிடப்பட்ட புலம்பெயர்தல் − எப்படி எதிர்கொள்ளலாம்’ என்ற தலைப்பில் ஒரு உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 40 நாடுகள் கலந்து கொண்டன. அமெரிக்கா, வியட்நாம், ஈராக் தவிர ஏனைய நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. அதன் துவக்க உரையினூடே கெய்ர் ஸ்டார்மர் திட்டமிடப்பட்ட புலம்பெயர்தல் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறது, யார் யார் அவற்றை வழி நடத்துகின்றனர், மனிதகுலத்துக்கே எவ்வாறெல்லாம் ஆபத்து விளைவிக்கிறது, தடுப்பதற்கான உத்திகள், கடந்தகால நேர்மறையான / எதிர்மறையான அனுபவங்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டார். அனைவரும் இணைந்து பணியாற்றும் வகையில் செயல் திட்டங்கள் மாநாட்டின் இறுதியில் தீர்மானங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மேலும் இந்த மாநாட்டில் மெடா, எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), டிக் டாக் என்ற மென்பொருள் நிறுவனங்களும் கலந்து கொண்டன. தொழில் நுட்பத்தின் துணை கொண்டு எவ்வாறெல்லாம் பொய்கள் கட்டமைக்கப்படுகின்றன, அதே மென்பொருளைக் கொண்டு எவ்வாறு அத்தகைய முயற்சிகளை தொடர்ந்து கண்காணிப்பது, முறியடிப்பது, தீய விளைவுகளைக் குறைப்பது போன்ற வழிமுறைகளை அதிகரிப்பது, வலிமைப்படுத்துவது, வேகப்படுத்துவது ஆகியவை விவாதிக்கப்பட்டு கருத்தொற்றுமை எட்டப்பட்டது.
மாநாடு முடிந்த சில நாட்களிலேயே சில ஆக்கபூர்வமான மாற்றங்கள் தென்படுகின்றன. அகதிகள் என்ற பெயரில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் ஆவணங்கள் சரி பார்க்கும் பணி ஜரூராக நடக்கின்றன. வீட்டை அல்லது தங்கும் விடுதிகளை வாடகைக்கு கொடுத்த உரிமையாளர்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இந்த விஷயத்தைத் தானே நம் பிரதமரும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் பல வருடங்களாக ஒவ்வொரு உலக அரங்கிலும் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் ஸ்வீடன் நாட்டு துணை பிரதமர் எப்பா புஷ் என்ற பெண்மணி நாடாளுமன்றத்தில், “இஸ்லாமியர்கள் தாங்கள் வைத்தது தான் சட்டம் என்று நடந்து கொள்வதைக் கை விட வேண்டும். ஸ்வீடனின் ஜனநாயக மாண்புகளை கற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும். முடியாதென்றால் நாட்டை விட்டு வெளியேறலாம்” என்று துணிச்சலாகப் பேசினார்.