தர்மம் வென்றது

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்பை வழங்கி நீதித்துறை வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன  அமர்வு  நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷன், டி.ஓய். சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர். பெரும்பாலான  அரசியல் சாசனப் பிரச்சினைகளில் தீர்ப்பு வழங்கும் உச்ச நீதிமன்ற அமர்வுகளில் ஒருமனதாக கருத்தொற்றுமையோடு தீர்ப்பு வழங்கியதில்லை. சாதாரணமான வழக்குகளில் கூட  4-1, 3-2 என்று 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு பிளவுப்பட்ட தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த  முக்கியத்துவம்  வாய்ந்த இந்த தீர்ப்பை நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றார்கள்.

ராம் லலா எனப்படும் பிரச்சினைக்குரிய  2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பகுதிகளாக  பிரித்து அலகாபாத்  ஐகோர்ட்டு 2010ல் அளித்த தீர்ப்பை  ரத்து செய்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இந்த 5 உறுப்பினர் பெஞ்ச். ராமஜென்ம பூமி இடத்தில் கோயில் கட்ட அறக்கட்டளை அமைக்க உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். எதிர்காலத்தில் மத சம்பந்தப்பட்ட இடங்களில் ஏற்படும் சர்ச்சைகளுக்கே வழிகாட்டியாக இந்தத் தீர்ப்பு அமையும்.

இந்த வழக்கில் மற்றொரு சிறப்பு அம்சமாக ஹிந்துக்கள் சார்பில் வாதிட்ட 90 வயதைத் தாண்டிய மூத்த சட்ட நிபுணர் பராசரன் வழக்கு முடியும் வரை நின்றுகொண்டே வாதாடினார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவரை வயதானவர் என்பதால்  உட்கார்ந்து கொண்டு வாதிடுங்கள்  என்று கூறியபோதும் ராமபிரானுக்காக வாதாடுகிறேன். அதனால் நின்றுகொண்டே வாதிடுகிறேன் என்று கூறினார். அவருடன்  இணைந்து வாதாடிய மற்றொரு வழக்கறிஞரான சி.எஸ்.வைத்தியநாதன் 45 நாட்களும் காலணி அணியாமலேயே வாதாடினார் என்பது மேலும் ஒரு சிறப்பு. இது இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் ராமபிரானை ‘புருஷோத்தமன்’ என்று போற்றிடும் நம்பிக்கைக்கு  வலுசேர்க்கும் ஆதாரமாக இந்தத் தீர்ப்பு அமைந்தது.