தமிழக சிற்பக்கலையை பறைசாற்றும் சீன கோயில்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நிகழ்த்தவுள்ளனர்.

வட இந்தியாவில் எத்தனையோ சுற்றுலா தலங்கள் அமைந்திருக்க, எதற்காக தென் கோடியில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதே தற்போது அதிகம் புழங்கும் கேள்வியாக உள்ளது. வரலாற்றை சற்று ஆராய்ந்து பார்த்தால் இதற்கான விடை புலப்படும். மாமல்லபுரத்துக்கும், சீனாவுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வணிக மற்றும் கலாச்சாரரீதியிலான தொடர்பு இருந்திருக்கிறது என்பதை பல்வேறு வரலாற்று குறிப்புகள் எடுத்துரைக்கின்றன.6-ம் நூற்றாண்டுகளில் பல்லவ சாம்ராஜ்யம் அமைந் திருந்த காலக்கட்டத்தில், சீனாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே கடல்வழி வணிகங் கள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக, மாமல்லபுரத்துக்கும், சீனாவின் ஃப்யூஜியான் மாகாணத்துக்கும் இடையே கடல் வழியாக பெரிய அளவில் ஏற்றுமதிகளும், இறக்குமதிகளும் நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு சாட்சியாக, ஃப்யூஜியான் மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.

அம்மாகாணத்தில் அமைந்துள்ள குவான்சோவ் நகரில் தமிழகத்தின் இந்து கோயில்களின் கட்டமைப்பில் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான வழிபாட்டு தலங்களையும், சிற்பங்களையும், தமிழ் கல்வெட்டுகளையும் இன்றளவும் காண முடிகிறது. அந்நகரில் உள்ள கய் உவான் கோயிலில் உள்ள புத்தர் சிற்பங்களும், தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் உள்ள கோயில்களில் அமைந்திருக்கும் சிற்பங்களும் நூறு சதவீதம் ஒத்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக் கின்றனர். தமிழகத்திலிருந்து சிற்பக்கலைஞர்களை சீனாவுக்கு வரவழைத்து இந்தக் கோயில்களும், சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இல்லையெனில், தமிழக சிற்பக் கலையை கற்றுத் தேர்ந்த சீன பொறியாளர்கள் இந்த கட்டிடங் களை எழுப்பியிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, சீனாவின் புகழ்பெற்ற புத்த துறவி ஹுயுன் சங், பல்லவர்களின் தலை நகரான காஞ்சிபுரத்துக்கு வந்ததற்கும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புத்தத்துறவி போதி தர்மர், சீனாவுக்கு சென்று புத்த மதத்தையும், குங்ஃபூ தற்காப்பு கலையை பரப்பியதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மாமல்லபுரத்துடன் வணிக, கலாச்சார ரீதியிலான தொடர்பில் இருந்த ஃப்யூஜி யான் மாகாணத்தின் ஆளுநராக தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் 1998 முதல் 2002 வரை பதவி வகித்திருக்கிறார்.