தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மேலும் வலுவடையச் செய்வோம் என பாஜக தேசிய பொதுச் செயலாளரான முரளிதர் ராவ் தெரிவித்தார்.
பின்னர் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்,
உள்ளாட்சி தேர்தலில் 7 மாவட்டக் கவுன்சிலர்கள், 81 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள். இது பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளதா?
நிச்சயமாக இந்த முடிவுகளால் தமிழக பாஜகவினரின் உற்சாகம் அதிகரித்துள்ளது. தேர்தல் செயல்பாடுகளை இன்னும் சிறப்பாக செய்திருந்தால் வெற்றி எண்ணிக்கை அதிகரித்திருக்கும். ஏனெனில், எதிர்பார்த்த அளவுக்கு இந்த தேர்தலில் அதிமுகவினரிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக, மாவட்ட அளவில் அதிகமான ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் மாவட்ட கவுன்சிலர்களும் அதிகரித்திருப்பார்கள்.
ஊராட்சி வெற்றியின் தாக்கம் சட்டப்பேரவை தேர்தலில் இருக்கும் என நம்புகிறீர்களா?
தற்போது தமிழகத்தில் எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. இதை தொடரவும் விரும்புகிறோம். இதுபோன்ற கூட்டணி, தேர்தல்களின் முடிவுகளில் நல்ல பலன்களை தரும். இதனால், இந்த கூட்டணியை மேலும் வலுவடையச் செய்வோம். இதற்காக என்ன செய்வது என யோசித்து வருகிறோம்.
அப்படியானால், ரஜினி கட்சி தொடங்கினால் அதையும் தங்கள் கூட்டணியில் சேர்க்க விரும்புகிறீர்கள் என எடுத்துக் கொள்ளலாமா?
முதலில் ரஜினி கட்சியை தொடங்கட்டும். அதை கட்டமைக்கட்டும். பிறகு, உங்களின் இந்த கேள்விக்கு நான் பதில் தருகிறேன்.
உள்ளாட்சி தேர்தலில் லாபம் கிடைத்துள்ள சூழலிலாவது தமிழகத்தில் பாஜக மாநில தலைவரை உடனடியாக அமர்த்துவீர்களா?
சூழல் எதுவாக இருப்பினும் பாஜகவுக்கு தலைவர் அமர்த்தப்படுவார். இன்னும் ஓரிரு தினங்களில் மாவட்ட தலைவர்கள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, மாநில தலைவருக்கான தேர்தலையும் நடத்தி அந்தப் பதவிக்கான நபரை அறிவிப்போம். தற்போது, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அடிபடும் பெயர்கள் அனைத்தும் வதந்தியே.
குடியுரிமை சட்டத்துக்கு அதிமுக அளித்த ஆதரவினால் தனது மகனும், மகளும் தோல்வி அடைந்ததாக அக்கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராசா கூறியுள்ளாரே?
இதற்கு அவரது அதிமுக கட்சி தலைமைதான் பதிலளிக்க வேண்டும். அன்வர் ராசா பாஜகவைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் இதுகுறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.
ரஜினியுடன், கமல் இணைய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறதே?
அவர்கள் இணைவதில் பாஜகவுக்கு என்ன தொடர்பு இருக்க முடியும். எனவே, இதுகுறித்து என்னால் கருத்து கூற முடியாது.
பாஜக தலைவர் அமித்ஷா, தமிழக அரசியல் அமைப்பு ஊழலில் சிக்கிவிட்டதாக புகார் கூறியிருந்தார்? இது இன்னும் தொடர்வதாக கருதுகிறீர்களா?
இதை அவர் 2018-ம் ஆண்டில்தானே கூறினார். 2020- ம் ஆண்டில் கூறவில்லையே. மேலும், இதை இப்போதைய பாஜக தலைவரும் கூறவில்லை. சமீப காலமாக பலமுறை தமிழகம் வந்த நானும் இவ்வாறு கூறவில்லையே.