2017 ஆம் ஆண்டு அப்போது நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தமிழ்நாட்டில் ராணுவத்தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி 2019-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி திருச்சியில் இத்திட்டம் முறைப்படி தொடங்கப்பட்டது. ரூ.3,143 கோடியில் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைக்கவுள்ள ராணுவ தளவாட திட்டங்கள் குறித்த அறிவிப்பும் அன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி லார்சன் & டூப்ரோ நிறுவனம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏவுகணை சார்ந்த உதிரிபாகங்கள் ஒருங்கிணைப்பு, ஏவும் தளவாடங்கள், வெடிபொருள் சாராத ஏவுகணை பரிசோதனை அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கு கோவை மாவட்டத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் 16 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உற்பத்தி மையம் ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ளது.
இது தமிழ்நாட்டின் ராணுவத் தளவாட உற்பத்தி மையத்தின் ஒரு அங்கமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளவாடங்களை தயாரித்து வரும் ஐரோப்பிய நிறுவனமான எம்பிடிஏ (MBDA)-வுடன் எல் & டி இணைந்த கூட்டு நிறுவனம் இந்த உற்பத்தி மையத்தை கோயம்புத்தூரில் தொடங்குகிறது.