தன்குடும்பத்தில் உள்ள அனைவரையும், சங்கப் பணியில் ஈடுபடுத்திய குமாரஸ்வாமி ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, குமாரஸ்வாமி ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

சரவணப்பெருமாள் −- பர்வதவர்த்தினி தம்பதியருக்கு மகனாக 1950 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கோட்டாறு என்னும் ஊரில் பிறந்தார், குமாரஸ்வாமி ஜி. கோட்டாறில், தேசிக விநாயகர் தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, பி.எஸ்.சி (கணிதம்) படிப்பை, நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் படித்துத் தேர்ச்சி பெற்றார்.

1970-ல், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 1972-ல், பி.எட் பட்டம் பெற்றார். அதன் பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எட் பட்டம் பெற்றார். பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் எம்.ஏ. வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1977 செப்டம்பர் 14ல், பிரேமா என்ற பெண்ணை மணமகளாக ஏற்று திருமணம் செய்து கொண்டார். திருமதி பிரேமாவும் “ராஷ்டிர சேவிகா சமிதி” என்ற பெண்கள் அமைப்பில், பல பொறுப்புகளை வகித்து, தற்போது கன்னியாகுமரி கோட்டத்தின் செயலாளர் பொறுப்பிலிருந்து, சமூகப் பணி செய்து வருகிறார்.

அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண். மூத்தவர் சுப்பிரமணியம் பி.காம் பட்டதாரி, சங்க ஸ்வயம்சேவக், இரண்டாவது பெண் பர்வதவர்த்தினி, பி.ஏ. (இசை) முடித்து 5 ஆண்டு “சம்ஸ்கிருத பாரதி” என்ற அமைப்பில் முழுநேர ஊழியராக பணியாற்றி, தற்போது எம்.ஏ சமஸ்கிருதம் படித்து முடித்து, பி.எச்.டி. பட்டம் பெற்று திருமணமாகி, பெங்களூரில் வசித்து சம்ஸ்கிருத பாரதி அமைப்பு வேலை செய்து வருகிறார். மூன்றாவது மகன் சரவணலிங்கம், இன்ஜினியராக உள்ளார்.

குமாரஸ்வாமி ஜி, குடும்பம் பக்தியில் சிறந்த குடும்பமாக இருந்தது. அவர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, அவரது பள்ளி ஆசிரியர் காளியப்பா பிள்ளை அவரை ஷாகாவிற்கு அழைத்துச் செல்வார், பள்ளி பருவத்திலேயே தினசரி ஷாகாவிற்குச் செல்வார்.

கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும்போதே, கல்லூரியில் (ஏ.பி.வி.பி) அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தில் இணைந்து, நாகர்கோவில் நகர செயலராக திறம்பட பணியாற்றினார், குமாரஸ்வாமி ஜி. திருவனந்தபுரத்தில் நடந்த அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தில், அகில பாரத மாநாட்டில் பிரிதிநிதிகளுடன் கலந்து கொண்டார்.

1970-ல் இருந்தே சங்கப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். சுந்தர லட்சுமணன் ஜியின் வழிகாட்டுதலுடன், நகர் பௌதிக் பிரமுக், நகர் காரியவாஹ், பின் ஜில்லா பௌதிக் பிரமுக், ஜில்லா காரியவாஹ், விபாஹ் காரியவாஹ் என சங்கத்தில் பல பொறுப்புகள் ஏற்றுக் கொண்டு, சிறப்புடன் பணியாற்றினார்.

1995-ஆம் ஆண்டு, சங்க சீருடை அணிந்த 10,000 ஸ்வயம்சேவகர்களின் “ஹிந்து சங்கமம் நிகழ்ச்சி” இந்து கல்லூரியில் நடைபெற்றது, அதில் ஜில்லா கார்யவாஹ் ஆக அவருடைய பங்கு சிறப்புடையது.

கன்னியாகுமரி மாவட்டம், கிறிஸ்துவ சமூகத்தின் ஆதிக்கத்தால், ஹிந்துக்கள் பலவித கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். ஹிந்துக்களை பாதுகாக்க, “ஹிந்து எழுச்சி மாநாடு”கள் நடத்தப்பட்டன.

1982-ல் மண்டைக்காட்டில், மண்டைக்காடு பகவதி அம்மனின் பெண் பக்தர்களுக்கு இடையூறு செய்த கிறிஸ்துவ மீனவர்களிடம் இருந்து காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடந்தது. மண்டைக்காடு கலவரம் துவங்கியது முதலே, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பாக சங்கம் இருந்தது, குமாரசுவாமி ஜியின் பணியும் சிறப்பாக இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் முன்னாள் அகில பாரத தலைவர் தேவரஸ் ஜி அறிவுறுத்திய சாமாஜிக் சமரஸதா நிகழ்ச்சியில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் சுவாமிகளை, குமரி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கோயில்களிலேயே சுவாமிஜி பூஜை செய்தார். இந்த நிகழ்வு, அந்த சமுதாய மக்களிடம் பெரும் மகிழ்ச்சியையும், மனமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்தப் பணியில் பி.எம் ரவிக்குமார் ஜி, குமாரசுவாமி ஜியுடன் இருந்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஜில்லா சங்கசாலக் மானனிய முத்துசுவாமி ஜி, சங்கப் பாடல்களை எவ்வாறு ராகத்தோடு, இனிமையாகப் பாடுவது பற்றி குமாரசுவாமி ஜிக்கு கற்றுக் கொடுத்தார். அவரும் ஸ்ரீ குருபூஜை நிகழ்ச்சி, மற்ற சங்க நிகழ்ச்சிகளில் அனைவரையும் கவரும் வகையில், இனிமையாகப் பாடுவார். கண்ணா உன் சன்னதியில் நானும் இடம்பெற வேண்டும் என்ற சங்கப் பாடலை, அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வண்ணம் பாடுவார்.

குமாரசுவாமி ஜி, 1996-ல் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றார். 12 ஆண்டு தலைமையாசிரியராக சிறப்புடன் பணியாற்றி, 2008-ல் பணி ஓய்வு பெற்றார். 1996-ல் கன்னியாகுமரி விபாக் கார்யவஹ் ஆக பொறுப்பேற்றார். 2 ஆம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாம் முடித்து உள்ளார்.

2009 ஆம் ஆண்டு “வித்யாபாரதி” என்ற சங்க சகோதர அமைப்பில், தென் தமிழக மாநில தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. 9 ஆண்டு தலைவராக இருந்த பின்னர், தற்போது வித்யாபாரதி தென் தமிழக அமைப்பில், சம்ரட்ஷக் (புரவலர்) பொறுப்பில் இருக்கிறார்.

தான் மட்டுமல்லாது, தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும், சங்கப் பணியில் ஈடுபடுத்திய குமாரஸ்வாமி ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.