உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 18% ஆக இருந்தாலும், தண்ணீர் ஆதாரம் 4% அளவுக்கே உள்ளது. இதனால் வா டெக்வபாக் (VA Tech Wabag) போன்ற நீர் மேலாண்மை நிறுவனங்களுடன் இணைந்து நீர் மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து வாடெக் வபாக்நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜீவ் மிட்டல் கூறியதாவது: பொதுவாக நிலத்தின் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இதுஉலகின் மொத்த நன்னீர் ஆதாரத்தில் 3% மட்டுமே. எஞ்சியுள்ள 97%தண்ணீர் வளம் கண்டறியப்படவில்லை. இந்தியாவில் 90% தண்ணீர் விவசாயத்துக்கு தேவைப்படுகிறது. தற்போது இந்தியாவில் 54% பகுதி தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது. இதனால் 5கோடி மக்கள் மற்றும் 68% சாகுபடிநிலப்பரப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்தகைய சூழலில் வற்றாத மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய தண்ணீர் ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.
உடனடி மாற்று ஆதாரமாக கடல் நீர் உள்ளது. நம் நாட்டில் 7,500 கி.மீ. தூர கடலோரப் பகுதி உள்ளது. இந்நிலையில், கடல் நீரைசுத்திகரிக்கும் வழிமுறை ஒரு சாத்தியமான மற்றும் கட்டுபடியாகும் மாற்று வழியாக உள்ளது. தண்ணீரை மறு சுழற்சி நீரைப் பயன்படுத்துவது தொடர்பான அரசு கொள்கைகளை பல மாநிலங்கள் தற்போது பின்பற்றுகின்றன. அந்த வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு என்பது எங்களது முக்கிய இலக்காக உள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதை இலக்காககொண்டு மத்திய அரசு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. பட்ஜெட்டில் இதற்கான ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. சர்வதேச தண்ணீர் தினத்தில் (மார்ச் 22) எங்கள்நிறுவனம் இந்தியாவின் தண்ணீர்தேவைகளுக்கு தீர்வு வழங்குவதில் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.