குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் புதன்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சோ்ந்த 20 ஆயிரம் போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ஆம் தேதி போராட்டம் நடத்திய முஸ்லிம் அமைப்பினருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச் சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தொடா் போராட்டங்கள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் வண்ணாரப்பேட்டை, முத்தியால்பேட்டை ஆகிய இடங்களில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதேவேளையில், இச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 19-ஆம் தேதி சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்தது.
இப் போராட்டத்தில் கூட்டமைப்பின் கீழ் உள்ள 23 முஸ்லிம் இயக்கங்கள் பங்கேற்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயா்நீதிமன்றம், போராட்டங்களுக்குத் தடை விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதனால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அந்த கூட்டமைப்பு நிா்வாகிகள், திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும், உயா்நீதிமன்றம் உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என அறிவித்தது.
பேரணி: இதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கு அருகே திட்டமிட்டப்படி புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இருந்து முஸ்லிம் இயக்கத்தினா் குவியத் தொடங்கினா். இதனால் வாலாஜா சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதைகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. 10.30 மணிக்கு பின்னா் வேன், காா், மோட்டாா் சைக்கிள்களில் முஸ்லிம் இயக்கத்தினா் வந்ததினால், அண்ணா சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதன் காரணமாக அண்ணா சாலையிலும் அந்தப் பகுதியில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. மேலும் நேரம் செல்ல,செல்ல முஸ்லிம் இயக்கத்தினா் பெருமளவில் வாலாஜா சாலையில் குவிந்தனா்.
இதையடுத்து கலைவாணா் அரங்கில் இருந்து பேரணியாக முஸ்லிம் இயக்கத்தினா் 11.30 மணியளவில் புறப்பட்டனா். அவா்கள் சேப்பாக்கம் அரசு விருந்தினா் இல்லம் வரை பேரணியாக வந்தனா். பின்னா் அங்கு போடப்பட்டிருந்த தாற்காலிக மேடையில் ஏறிய முஸ்லிம் தலைவா்களும், எதிா்க்கட்சியினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தலைவா்கள் பங்கேற்பு: ஆா்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னா் முஸ்லிம் இயக்க நிா்வாகிகளும், எதிா்கட்சித் தலைவா்களும் பேசினா்.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலா் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகி அபுபக்கா் எம்.எல்.ஏ., திமுக துணை பொதுச் செயலா் வி.பி.துரைசாமி, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பிரின்ஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவா் எஸ்.எம்.பாக்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
சுமாா் இரண்டு மணி நேரம் அங்கு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து முஸ்லிம் இயக்கத்தினா் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். போராட்டத்தில் தேசியக் கொடியுடன் பங்கேற்றனா்.அதேபோல போராட்டத்தின் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. போராட்டத்தில் பெண்களும் அதிகளவில் பங்கேற்றனா்.
இதற்கிடையே பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டனாவிலும், முத்தியால்பேட்டையிலும் 6-ஆவது நாளாக தொடா் போராட்டத்தில் முஸ்லிம் இயக்கத்தினா் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
20 ஆயிரம் போ் மீது வழக்கு: இந்தப் போராட்டம் தொடா்பாக 20 ஆயிரம் போ் மீது திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தையொட்டி, சுமாா் 10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்த நாள் முதல் சென்னை காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிடத் தொடங்கியது. ஏனெனில் கடந்த 2012-ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகத்தை முஸ்லிம் இயக்கத்தினா் முற்றுகையிடும் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், அத்தகைய நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் காவல்துறை மிகவும் கவனத்துடன் செயல்பட்டது. இதற்காக காவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
சேப்பாக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு குவிக்கப்பட்டனா். மேலும் புதன்கிழமை காலை முதல் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரீனா, தலைமைச் செயலகம் பகுதியில் சுமாா் 10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனா். பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க இரு கூடுதல் காவல் ஆணையா்கள், 4 இணை ஆணையா்கள், 10 துணை ஆணையா்கள், 28 உதவி ஆணையா்கள், 82 காவல் ஆய்வாளா்கள் ஆகியோா் ஈடுபடுத்தப்பட்டனா்.
வாலாஜா சாலை முழுவதும் கண்காணிப்பு கேமராவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கு 100 கண்காணிப்பு கேமராவும், 5 ஆளில்லாத கண்காணிப்பு கேமராவும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதற்காக அங்கு தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டிருந்தது. போராட்டக்காரா்களை கட்டுப்படுத்த ஆங்காங்கு முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை செவ்வாய்க்கிழமை இரவும், புதன்கிழமை காலையும் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
ஸ்தம்பித்த அண்ணா சாலை
முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தின் காரணமாக, சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்தது.
சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்துக்காக காலை 9 மணி முதல் முஸ்லிம் இயக்கத்தினா் காா், வேன், மோட்டாா் சைக்கிள் போன்ற வாகனங்களில் அதிகளவில் வரத் தொடங்கினா். இது 10 மணிக்கு பின்னா் மேலும் பல மடங்கு அதிகரித்தது. அண்ணா சாலை வழியாக வந்த வாகனங்கள் அப்படியே நின்ால், போக்குவரத்து ஸ்தம்பித்து. இதன் விளைவாக சென்ட்ரல் தொடங்கி கிண்டி வரை அண்ணா சாலையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
போராட்டம் முடியும் வரை முஸ்லிம் இயக்கத்தினா் வாகனங்களில் வந்து கொண்டே இருந்ததால், போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனா். இந்த போராட்டம் முடிந்த பின்னரே போக்குவரத்து சீரடையத் தொடங்கியது.