நாடாளுமன்றத்தில் டெல்லி வன்முறை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வன்முறையை சதி திட்டம் இல்லாமல் நடத்தியிருக்க முடியாது. டெல்லி வன்முறையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் வன்முறை மற்ற இடங்களிலும் பரவாமல் தடுத்து நிறுத்திய போலீசாரின் பணியை வெகுவாக பாராட்டுகிறேன்.
36 மணி நேரத்தில் வன் முறையை டெல்லி போலீசார் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளனர். 2 ஆயிரத்து 647 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 152 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வன்முறையில் தொடர்புடைய யாரும் சட்டத்தின்பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்கள் எந்த மதமாக, சாதியாக, அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் விட மாட்டோம். அதேசமயம் எந்த ஒரு அப்பாவியும் தண்டிக்கப்பட மாட்டார்கள்.
வன்முறை நடந்த இடத்திற்கு நான் நேரில் செல்லவில்லை. எனக்கு பாதுகாப்பு கொடுக்க போலீசார் வந்தால், அவர்களால் வன்முறையை கட்டுப்படுத்த இயலாமல் போய் விடும் என்பதால் போகவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்ற டெல்லி நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்கவில்லை. அந்த சமயத்தில் வன்முறையை கட்டுப்படுத்துமாறு டெல்லி போலீசாரை நேரில் வற்புறுத்துவதில் ஆர்வமாக இருந்தேன்.
இருப்பினும் எனது உத்தரவின்பேரில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் வன்முறை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேவையில்லாமல் இனமோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஹோலி பண்டிகைக்கு பின்னர் டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்பினோம்.
டெல்லி வன்முறையில் 52 இந்தியர்கள் இறந்துள்ளனர். இவர்களில் இந்துக்கள் எத்தனை பேர்?, இஸ்லாமியர்கள் எத்தனை பேர்? என்று பிரித்து கூற விரும்பவில்லை. 526 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர். 371 இந்தியர்களின் வர்த்தக நிறுவனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 142 இந்தியர்களின் வீடுகள் தீக்கிரையாகின.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
அமித்ஷா பதில் அளித்துக்கொண்டிருந்தபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.