சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் சர்வதேசத் தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாய பெரு விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) நடைபெற்றது. சுமார் 1,100 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,023 கோடி மதிப்பில் அமையும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா – கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: தமிழக அரசு தேசிய அளவிலான விருது பெற்று மக்களிடம் நல்ல பெயர் வாங்கி விடுவார்களோ என அஞ்சி, எதிர்காலம் உண்டா என எண்ணி மக்களிடம் எதிர்க்கட்சி பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. உதாரணத்துக்கு நெடுவாசல் பிரச்னை; மத்திய அரசு என்ன சட்டம் கொண்டு வந்தாலும், மாநில அரசு தடையில்லாச் சான்று அளிக்காமல் அந்தப் பணி தொடங்காது என சட்டப்பேரவையில் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். விவசாயிகள் பாதிப்படையும் எந்த திட்டத்துக்கும் தடையில்லாச் சான்று வழங்க மாட்டோம்.
தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் திட்டத்துக்கு வித்திட்டது தி.மு.க. தான். 1996 இல் ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் வாயு கண்டறியப்பட்டது. இதை அறிந்த அப்போதைய மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தும் வகையில் 2010 இல் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றார். ஆழ்துளைத் கிணறு அமைத்து ஆய்வுப் பணி தொடங்க கிரேட் ஈஸ்ட் எனர்ஜி நிறுவனத்துக்கு 4 ஆண்டுகளுக்கு 2011 இல் அனுமதிக் கொடுத்தார். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தான் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக அரசு அனைத்து உதவி செய்யும் என அப்போதைய தி.மு.க. அரசு கூறியது.
இப்போது பொய் பிரசாரம் மூலம் கட்சியினரைத் திரட்டி போராட்டம் நடத்தி, பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது.
காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாத்திட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை இங்கு நான் வெளியிட விரும்புகிறேன்.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் நலனைக் காக்கவும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் அடங்கிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். அந்தவகையில், காவிரி டெல்டா பகுதியைப் பாதுக்காக சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்.
டெல்டா பகுதியில் விவசாயிகள் தங்களது உணர்வுகளை, உள்ளக் குமுறல்களை உணர்வுப்பூர்வமாகத் தெரிந்து கொண்டு நானும் ஒரு விவசாயி என்ற முறையில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். விவசாயிகளின் துன்பங்கள், துயரங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
இதைச் செயல்படுத்திட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து இதற்காக தனிச் சட்டம் இயற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.-க்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வித்திட்டதும் தி.மு.க. தான். அதை நிறைவேற்றியதும் தி.மு.க. தான். தி.மு.க. தான் அதைக் கொண்டு வந்தது என அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இத் திட்டத்தை தடுத்து நிறுத்தியது அ.தி.மு.க. அரசுதான் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
டெல்டா பகுதிகள் கடல் நீர் சார்ந்த பகுதியாக உள்ளன. கடல் நீர் நிலத்துக்குள் புகுந்துவிடும் வாய்ப்பு இருப்பதால், இதைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அரசு அனுமதி அளிக்காது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் கொண்டுவர முடியாது. விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திருச்சி, சேலம், திருவண்ணாமலையில் புதிய கால்நடைத் தீவன தொழிற்சாலை
திருச்சி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மேலும் 3 புதிய கால்நடை தீவனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
கால்நடை மற்றும் பறவைகள் வளர்ப்பின் மூலம், பால், இறைச்சி, முட்டை ஆகியவை கிடைப்பதனால், பெரும்பாலான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கால்நடை வளர்ப்பை பெரிதும் சார்ந்துள்ளனர். உழவர்களின் உற்ற தோழனாக விளங்கும் கால்நடைகள், உழவுத் தொழிலுக்கு பெரிதும் உதவுகின்றன.
விவசாயிகளால் வளர்க்கப்படுகின்ற கால்நடைகளுக்கு தரமான கால்நடைத் தீவனம் வழங்க வேண்டும் என்பதற்காக மேலும் 3 புதிய கால்நடைத் தீவன தொழிற்சாலைகள் திருவண்ணாமலை, திருச்சி மற்றும் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படும். காவிரியில் கடைமடை வரை வாய்க்கால்களைத் தூர்வாரி, நீர் கொண்டு சென்ற காரணத்தாலும், தமிழ்நாட்டில் வேளாண் பயிர் சாகுபடி பரப்பு, இந்த ஆண்டில் 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக பயிர் செய்யப்பட்டுள்ளது.
2016 – 2017இல் நிலவிய வறட்சியின் பிடியில் இருந்து விவசாயிகளைக் காக்க, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வறட்சி நிவாரணமாக ரூ.2,247 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கினோம். 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 90 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 48 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலேயே சாதனை அளவாக ரூ.7,528 கோடி விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக பெற்று தந்திருக்கிறது. விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள அரசு. 2019 – 20ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட அறிக்கையில், உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கென தனிக் கொள்கை ஒன்று வகுக்கப்படும் என அரசு அறிவித்தது. அதைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.