ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிறந்த தினம் இன்று

திருவாங்கூர் சமஸ்தானத்தில் பிறந்தவர் செண்பகராமன். தனது பதினேழாவது வயதில் ஜெர்மனிக்கு சென்றார். ஜெர்மனியில் இருந்தாலும் தன் தாய்நாட்டு மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதை அவரால் பொறுக்க முடியவில்லை. வசீகரிக்கும் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் கொண்ட அவர் பத்திரிகை நடத்தி, அதில் எழுச்சியூட்டும் படைப்புகளை வெளியிட்டு மக்களை சுதந்திரப் போராட்டத்திற்கு திசைதிருப்பினார்.

ஜெர்மனியில் வசித்து வந்த இந்தியர்களை ஒன்று திரட்டி INDIAN NATIONAL VOLUNTEERS என்ற அமைப்பை உருவாக்கினார். “ஜெய் ஹிந்த்” என்ற வீர, தீரக் கோஷத்தை உருவாக்கி அனைவரையும் முழக்கமிடச் செய்தவர் ஜெய் ஹிந்த் ஷெண்பகராமன். இவரது “ஜெய் ஹிந்த்” கோஷமே சுபாஷ்சந்திர போஸ் போன்றோரை சுதந்திரப் போராட்டத்திற்குள் வேகமாகக் களம் இறங்குவதற்கு வழிகோலின. ஒருமுறை செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்த போது “இந்தியர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருக்கவே தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே” என்றார் ஹிட்லர்.  இது செண்பகராமனை கோபப்படுத்தியது. ஹிட்லரை எதிர்த்து வாதாடி மன்னிப்புப் கோர வைத்தார் செண்பகராமன். இவர் இறக்கும்போது ‘பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு தன் சாம்பலை தான் வளர்ந்த ஊரில் உள்ள கரமனை ஆற்றில் கரைத்து, மீதியை வயல்களில் தூவ வேண்டும்’ என தன் மனைவியிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அவரின் ஆசையை அவரது மனைவியும் நிறைவேற்றினார்.

இவரைப் போன்றத் தியாகிகளை மனதில் நிறுத்தி மரியாதைச் செலுத்துவது இன்றைய இளைய சமுதாயத்தின் கடமை. ஜெய் ஹிந்த்