ஹிந்துக்கள், ஹிந்து தெய்வங்கள், சென்னிமலை முருகனை பற்றி மோசமாக பேசிய, கிறிஸ்துவ முன்னணியினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னிமலையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், 20,000 பேர் திரண்டதால், நகரமே குலுங்கியது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, முருங்கத் தொழுவு ஊராட்சி கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில், ஹிந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு ஜான் பீட்டர் என்பவர், மதமாற்றம் செய்யும் நோக்கில், வெளி மாவட்ட ஆட்களை அழைத்து வந்து ஞாயிறு தோறும் ஜெபக்கூட்டம் நடத்தினார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர், கடந்த மாதம், ௧௭ம் தேதி, அனுமதியின்றி குடியிருப்பு பகுதியில் ஜெபக்கூட்டம் நடத்த வேண்டாம் என்று கூறியதால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் உருவாகி, மோதல் ஏற்பட்டது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம், 26ம் தேதி சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன், கிறிஸ்துவ முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், ‘கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும், சென்னிமலை முருகன் கோவில் மலையை, கல்வாரி மலையாக, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம்’ என்று பேசினர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், கிறிஸ்துவ முன்னணியினர் மீது நடவடிக்கை கோரியும், சென்னிமலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹிந்து முன்னணியினர், சென்னிமலை ஆண்டவர் குழு, ஊர்மக்கள், முருக பக்தர்கள் என பல்வேறு அமைப்பினர் இணைந்து நடத்தினர்.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமை வகித்தார். 20,000க்கும் மேற்பட்ட முருக பக்தர்களும், பல்வேறு அமைப்பினரும் திரண்டதால், சென்னிமலை நகரமே குலுங்கியது.
சென்னிமலையில், 1984ல் மாட்டு வண்டி மலையேறிய நிகழ்வுக்கு தான் இவ்வளவு அதிக கூட்டம் கூடியது அதன்பிறகு தன்னெழுச்சியாக, ‘சென்னிமலை முருகனை காப்போம்’ என்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகமாக நேற்று திரண்டனர்.
‘அடுத்தகட்ட போராட்டத்தில்ஒரு லட்சம் பேர் திரள்வோம்‘
ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் பேசியதாவது: சென்னிமலையில் கிறிஸ்துவ முன்னணியினர், ஹிந்துக்கள், ஹிந்து தெய்வங்கள், சென்னிமலை முருகனை பற்றி ஒரு மணி நேரம் பேசியுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.பெயரளவுக்கு போலீசார் வழக்குபதிந்து, கண் துடைப்பு நாடகமாடினால், அடுத்த ஆர்ப்பாட்டத்தில், சென்னிமலையில் ஒரு லட்சம் பேர் திரள்வர்.இவ்வாறு பேசினார்.
சென்னிமலையின் பெருமை
சென்னிமலை முருகப்பெருமானுக்கு அபிேஷகம் செய்த தயிர் புளிக்காது. இக்கோவிலின் மூலஸ்தான கோபுரத்திற்கு மேல் காகம் இன்றும் பறக்காது. சுப செயல்கள் நிகழ்த்த பக்தர்கள் மூலஸ்தான முருகனிடம் சிரசுப்பூ வாக்கு கேட்கும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது. கடந்த 1984 பிப்.,12 அன்று இரண்டு காளைகள், வண்டி, வண்டிக்காரர் மூவருமே ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாதவர்கள். அவர்களுடைய கனவில் முருகன் காட்சி கொடுத்து, செங்குத்தான இம்மலையின் மீது அபிேஷக தீர்த்தம் எடுத்து வண்டி ஓட்டி வர ஆணையிட்டு அதிசயம் நிகழ்ந்த தலம்.முருகப்பெருமானை நேரில் கண்ட செங்கன்துறை பூசாரியாரும், வேட்டுவப்பாளையம் பூசாரியாரும் இக்கோவிலுக்கு பல திருப்பணிகளை தாமே முன்னின்று செய்துள்ளனர். 70 ஆண்டுகளுக்கு முன், ‘நடமாடும் மடாலயம்’ என அனைவராலும் போற்றப்பட்ட பழநி ஈசான சிவாச்சாரிய சுவாமிகள் இங்கு தான் வாழ்ந்தார்.அன்றைய தமிழக அரசு அவரின் அனுமதி, ஒப்புதலை பெறாமல் தமிழகத்தில் எந்த கோவிலிலும் கும்பாபிேஷகம் நடத்தியதில்லை. அத்தகைய அருள் ஆளுமை சக்திவாய்ந்த தலம் சென்னிமலை.