ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் பயனுள்ள சில விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இந்த விவாதம் ஆரோக்கியமான அதே நேரத்தில் ஆக்கபூர்வமான விவாதமாக தொடர வேண்டும் என்பது தேசிய சிந்தனையாளர்களின் சிந்தனை. ஒன்று நாட்டு மாடு பற்றிய சிந்தனை. கேரளத்திற்கு மாட்டு மாமிசத்திற்கு கொண்டு செல்லும் மாடுகளை காப்பது இன்னொன்று.
அடிமாட்டு பிரச்சினை
கேரளத்திற்கு கடத்தப்படும் மாடுகளில் 95 சதவீதம் மாமிசத்திற்காக கொல்லப்படுகின்றன. கேரளத்திலிருந்து அதிக அளவில் மாட்டுக்கறி அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள மாட்டுச் சந்தையில் வாரம் ஒன்றுக்கு ரூ. 10 கோடிக்கு மேல் மாட்டு வியாபாரம் நடைபெறுகிறது. இந்த மாடுகள் அனைத்தும் கேரளத்திற்கு போகும். மாநில அரசின் திடீர் உத்தரவால், கடந்த சில வாரங்கள் மாட்டு விற்பனை மந்தமாகவே நடைபெறுவதாக மாட்டு வியாபாரிகள் கூறினர்.
பெரும்பாலும் மாடுகள் லாரிகளில் கொண்டு செல்லப்படும். ஒரு லாரியில் 20க்கு மேற்பட்ட மாடுகள் கொண்டு செல்லும்போது, கொடுமையிலும் கொடுமையாக இருக்கும். இதை தடுத்து நிறுத்த எந்த ஜல்லிக்கட்டு போராளியும் இஸ்லாமியர்களும் முன்வரவில்லை. தடுத்த லாரிகளை விடுவிக்க லட்சக்கணக்கில் காவல் துறையினருக்கும் மற்ற அரசு துறையினருக்கும் கையூட்டு வழங்கப்படுவது சர்வசாதாரணமான நிகழ்வு.
அரசின் உத்தரவு
ஒரு லாரியில் ஏற்படும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 10க்கு மேல் இருக்கக்கூடாது. மாடுகள் ஒன்றோடு ஒன்று உரசக்கூடாது. மாடுகளுக்கு போதுமான அளவு வைக்கோல், தண்ணீர் வசதிகள் இருக்கவேண்டும். கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் பெற்ற பின்னர் தான் மாட்டை லாரியில் ஏற்ற வேண்டும். இந்த விதி முறைகளை கடைபிடிக்காத லாரிகள் பறிமுதல் செய்யப்படும், வழக்கும் பதிவு செய்யப்படும். இதனால் கேரளத்திற்கு மாடுகள் கொண்டு செல்வது குறைந்துள்ளது. விவசாயிகளின் பெயரால் சிலர் விடுக்கும் அறிக்கை கேலிக் கூத்தாக இருக்கிறது. விவசாயம் பட்டுப் போய்விட்டது, ஆகவே மாடுகளை கேரளத்திற்கு அனுப்புகிறோம் என வக்காலத்து வாங்குகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மாடுகளை பாதுகாக்கும் முயற்சி செய்வது புதிதல்ல. லாரிகளில் மாடுகளை ஏற்றி கேரளத்திற்கு கொண்டு செல்லும் போது, வழியில் தடுத்து காவல் துறைக்கு தகவல்கள் கொடுத்தபோது, கண்டு கொள்ளாமல் இருந்த நிர்வாகம், தற்போது தகவல்கள் கிடைத்தவுடன், லாரிகளை தடுத்து அவர்கள் மீது முறையான ஆவணங்கள் இல்லை என்றால் வழக்கு தொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு ஜல்லிக்கட்டு போராட்டமே முக்கியமான காரணம்.
ஒரு அபத்தமான குற்றச்சாட்டை இஸ்லாமிய அடிப்படைவாதியான ஓவைசி தனது ட்விட்டர் பதிவில், ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் ஹிந்துத்துவா சக்திகளுக்கு ஒரு மிகப் பெரிய பாடமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டுக்கும் பொது சிவில் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை.
நாட்டு மாடு
‘சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு – பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு’ என்ற பாடல் வரி எவ்வளவு உண்மை என்பதை புரிந்து கொண்டது போராட்டம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் காரணமாக, நாட்டு மாடுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய கறப்பது என்ற பெயரில் நாட்டு மாடுகளை ஒழித்து விட்டன.
இதுமட்டுமில்லாமல், நாட்டு மாடுகளின் முக்கியத்துவம் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. இதில் உள்ள நன்மைகள் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லப்பட்டது. மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தின் பிடியில் உள்ள இளைய சமுதாயத்தை மீட்க, ஜல்லிக்கட்டு ஒரு சம்பவமாக மாறியது. இன்று நாட்டு மாடுகளை வளர்க்க பலர் முன்வந்துள்ளது பலருக்கும் தெரியாத உண்மை. முந்தைய காலங்களில் நமது பாரம்பரிய விவசாயம் மாடுகளை சார்ந்திருந்தது என்ற உண்மையை மறைத்துவிட்டார்கள் என்ற ஆதங்கம் ஏற்பட்டுள்ளது.
பண்டைய காலங்களில் சோழ நாட்டிலும், கொங்கு நாட்டிலும் இடம் தங்களின் சொத்தாக கொண்டு சென்றது, நமது ஆத்மார்த்த லிங்கமும், நாட்டு மாடுகளும் மட்டுமே தான். நாட்டு மாடுகள் வளமாக இருந்தவரை நம் பொருளாதாரத்தில் சுயசார்புடன் இருந்த நாடு நமது பாரத நாடு.
நாட்டு மாட்டு பாலில் நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை. கலப்பின பாலில் உள்ளது. இதன் காரணமாக கலப்பின பசு மாட்டுப் பாலில் நோய் தன்மை உள்ளது என்பதை தற்போது புரிந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டு மாடு தரும் உணவு சாத்வீகமானது. இதனால் மனிதனின் மனமும் குணமும் கட்டுபாடும் ஒழுக்கமும் உடையதாக மாறுகிறது என்ற உண்மையையும் உணர தற்கால இளைஞர்கள் முன் வந்துள்ளார்கள். திருநீற்றை குறை கூறியவர்கள் உண்டு; நாட்டு மாட்டு சாணத்தில் தயாரித்த திருநீறு பூசுவதால், உடலின் பித்தத்தை அப்படியே தணிக்கும் என்பதும் புரியத் துவங்கியுள்ளது. இது இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக வெளி உலகிற்கு தெரியவந்தது.
அந்நிய நாட்டு மாடுகளின் சாணமும் சிறுநீரும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த நன்மையையும் கொடுப்பதில்லை. ஆனால் நமது நாட்டு மாட்டின் சாணத்திலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படும். அந்த இயற்கை உரம் விவசாய பூமியை மலட்டு பூமியாக மாற்றாது. இந்த உண்மையை தற்கால இளைஞர்கள் புரிந்து கொள்ள உதவிய போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்.