மார்ச் மத்தியில் உச்ச நீதிமன்றம் செய்த ஒரு செயல் தேசத்தை திடுக்கிட வைத்திருக்கிறது. ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற ஒரு மனுவை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் ஒரு பாலின உறவை நியாயப்படுத்தி பேசியது மட்டுமல்லாமல், இது ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாஸன அமர்வுக்கு கொண்டு போகப்படும் என்றும் அறிவித்தது.
“இது நீதிமன்றத்தில் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அல்ல, விரிவாக ஆராய்ந்து பார்த்து (நாடாளுமன்றம் போன்ற) சட்டம் இயற்றும் அமைப்பு தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, அதிர்ந்து போன வழக்கறிஞர்கள் சங்கம் (பார் கவுன்சில் ஆப் இந்தியா) தீர்மானம் நிறைவேற்றியது. வழக்கமாக நீதிமன்றத்திற்கு ஆதரவாக கொடி பிடிக்கும் இந்த கவுன்சில் இந்த விவகாரம் நீதிமன்றத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று பிரகடனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே பாலின உறவு பாரத கலாசாரத்திற்கு விரோதமானது என்று பார் கவுன்சில் கருதுகிறது.
ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற மனுவை மத்திய அரசு உச்சநீதிமன்றத்திலேயே எதிர்த்தது நல்ல விஷயம். அவ்வாறு அங்கீகரிப்பது சமுதாயத்தில் கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு தனது வாக்குமூலத்தில் தெரிவித்தது.
மத்திய அரசின் இந்த கருத்து வெளியான மறுநாள், மார்ச் 14 அன்று பானிபட்டில் செய்தியாளர்களிடையே பேசுகையில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொஸபலே, “திருமணம் என்பது ஹிந்து சமுதாயம் புனிதமாக போற்றும் விஷயம். நமது பாரம்பரியத்தில் அது ஒப்பந்தமோ புலன் இன்பத்திற்கான கருவியோ அல்ல. தனிப்பட்ட இன்பத்திற்காக அல்லாமல் சமுதாயத்தின் நலனுக்காக, குடும்பத்தின் தொடர்ச்சிக்காக ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவது தான் முறை. தனிப்பட்ட இன்பத்திற்கான ஒரே பாலின திருமணம் முறை அல்ல” என்று தெளிவுபடுத்தினார்.
“திருமணங்களில் உள்ள வரதட்சணை முதலிய தீமைகளை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதுதான் முக்கியம்” என்று அவர் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருப்பது சமுதாய நலனில் அக்கறையுள்ள அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய வழிகாட்டல்.
ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை பாரத கலாசாரத்திற்கு விரோதமானது என்று கூறி ஏற்கனவே ஆங்காங்கு ஹிந்து மடாதிபதிகள் எதிர்க்கத் தொடங்கி விட்டார்கள். அங்கீகாரம் அளிக்கப்பட்டால் அதை நாங்கள் எதிர்த்து வழக்குத் தொடுப்போம் என்றும் துறவிகள் அறிவித்திருப்பது நல்ல அறிகுறி.