பிரதமர் மோடி தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், வடகிழக்கு அட்லாண்டிக் நாடான சூரிநாம் நாட்டின் புதிய அதிபராக சந்திரிகா பிரசாத் சந்தோகி பதவி ஏற்றது பற்றி குறிப்பிட்டார்.
சந்தோகி, தனது ஒரு கையில் வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு, ‘ ஐ, சந்திரிகா பிரசாத் சந்தோகி’ என்று ஆரம்பித்தார். உடனே, வேத புத்தகத்தில் இருந்து ஒரு மந்திரத்தை வாசிக்க தொடங்கினார்.
‘’ஹே அக்னி, நெருப்பு. நான் பதவி ஏற்கிறேன். அதற்காக எனக்கு வலிமையும், திறமையும் தாருங்கள். பொய்மையில் இருந்து விலகி இருக்கவும், உண்மையை நோக்கி நடைபோடவும் ஆசீர்வதியுங்கள்” என்ற அந்த சமஸ்கிருத மந்திரத்தை வாசித்தார். பதவிப்பிரமாணத்தை முடிக்கும்போது, ‘’ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி” என்று கூறினார்.
உண்மையிலேயே இது இந்தியர்களாகிய நமக்கு பெருமைக்குரிய விஷயம். சந்தோகிக்கு வாழ்த்துகள்.
சூரிநாமுடன் இந்தியாவுக்கு நெருக்கமான உறவு உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து அங்கு சென்ற இந்தியர்கள், நான்கு, ஐந்து தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். தற்போது, அங்கு நான்கில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள், இந்திய வம்சாவளியினர்.
அங்கு பேசப்படும் பொதுமொழிகளில் ஒன்றான ‘சர்நாமி’, நமது போஜ்புரி மொழியின் பேச்சுவழக்கை கொண்டது. இந்த கலாசார தொடர்பால் இந்தியர்கள் பெருமைப்படுகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.