ஜி20 அமைப்பிற்கு பாரதம் தலைமை ஏற்றுள்ளது. இதன் அடிப்படையில் இந்த அமைப்பின் மாநாடு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த சூழலில், சுற்றுலாத்துறை தொடர்பான மாநாடு, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நாளை முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜி20 அமைப்பை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு, நடக்கும் முதல் சர்வதேச மாநாடு இதுவாகும். இதனையடுத்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின், பிரச்சனைக்குரிய பகுதியில் ஜி20 மாநாட்டை எந்த வடிவிலும் நடத்தினாலும் அதனை சீனா எதிர்க்கும். இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாரதம், “எங்களது சொந்த மண்ணில் எந்த இடத்திலும் மாநாட்டை நடத்துவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. எல்லையில் சமாதானம் மற்றும் அமைதி நிலவினால் மட்டுமே, சீனாவுடனான உறவு சீராக இருக்கும்” எனக் கூறியுள்ளது. இதனிடையே, காஷ்மீரில் நடக்கும் மாநாட்டை புறக்கணிக்க பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான துருக்கி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.