நம் பாரதத்தின் அமைதி மனோபாவத்தை, பயம் என நினைத்த சீனா கடந்த காலங்களில் பல ஆக்கிரமிப்புகளை நடத்தியது.
பாஜக அரசு பதவி ஏற்றது முதல் நடைபெறும் நிகழ்வுகள், உலக அரங்கில் பாரதத்தின் ஆளுமை வளர்ச்சி சீனாவை அசைத்து பார்த்தது.
சமீபகால அதிரடி நடவடிக்கைகளான, காஷ்மீர் 370-வது சட்டப்பிரிவு நீக்கம், லடாக் யூனியன் பிரதேச அறிவிப்பு, நவீன எல்லை சாலைகள், பாலங்கள், ரயில் சேவைக்கு அனுமதி, போர் தளவாடங்கள் நிறுத்தம் போன்ற நம் பாரதத்தின் பல நடவடிக்கைகளால் சீனா கோபத்தின் எல்லைக்கே சென்று என்ன செய்கிறோம் என தெரியாமல் தவறுகளுக்கு மேல் தவறுகளை செய்து வருகிறது.
சமீபத்தில் லடாக், அருணாச்சல் பகுதிகளை பாரதத்தின் மாநிலமாக ஏற்கமுடியாது, பாரதம் அதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என விஷமத் தனமான கருத்துகளை சீன வெளியுறவு செய்துயாளர் சுவோலிஜியான் கூறியுள்ளார்.
ஏழு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் எல்லையில் படைகளை திரும்பப்பெறுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. சீனா சுழற்சி முறையில் வீரர்களை எல்லையில் நிறுத்துகிறது. வரப்போகும் குளிர்காலம் இதை மேலும் கடினமாக்கலாம்.
வரும் நவம்பர் 17-ல் ரஷ்யாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பாரத பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சில நல்ல முடிவுகள் எடுக்கப்படலாம் என நம்புவோம்.
உலக நாடுகளின் அழுத்ததால் சீனா தன் ஆணவத்தை விட்டு இறங்கி வர வேண்டும். இல்லை என்றால் உலக நாடுகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் அது சந்திக்கப்போகும் இழப்புகள் மிகப்பெரியதாக இருக்கும்.