சிறுமிகளை சிதைக்கும் அரக்கர்களைத் தூக்கிலிடுக!

வருகின்ற செய்திகளையெல்லாம் படிக்கவே முடியவில்லை. அந்தக் குழந்தைகள் எல்லாம் எப்படியெல்லாம் கதறியிருக்கும், நடுங்கியிருக்கும், உடலால் துன்பப்பட்டு இருக்கும் என்று நினைக்கும்போது மனம் பிசைகின்றது. தாங்கவே முடியவில்லை.

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, வீட்டில் நின்று கொண்டிருந்த குழந்தை, வீட்டில் நின்று கொண்டிருந்த சிறுமி எனக் கடத்திச் செல்கிறார்கள். தாங்களும் ஒரு பெண்ணின் வயிற்றிலே பிறந்தவர்கள்தான் என்பதை மறந்து போகிறார்கள். ஆடிப்பாடி விளையாடும் சிறுமிகளிடம் கொடுமையாக நடந்துகொள்ள இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? தங்கள் குடும்பங்களிலே பெண்களைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு ஒரு சிறுமியை வக்கிரத்தனமாகத் துன்புறுத்த எப்படி முடிகிறது? இது என்ன விதமான அரக்கத்தனம்?

எந்த நாட்டிலே சக்திவழிபாடு என ஒன்பது நாட்கள் அம்பிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வழிபடுகிறோமோ, எந்த நாட்டிலே கன்யாபூஜை, பாலாபூஜை எனச் சிறுமிகளை அலங்கரித்துத் தெய்வமாகவே நமஸ்கரிக்கிறோமோ அந்த நாட்டிலேதான் எட்டு வயது, பத்து வயதுச் சிறுமிகள் சின்னாபின்னமாக்கப்பட்டு, சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து உயிரை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்குச் சிறப்பு நீதிமன்றங்கள் அமையச் செய்ய வேண்டும். அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் விசாரித்து, வன்புணர்வு நிரூபிக்கப்படுமானால் குற்றவாளியை உடனே தூக்கிலிடவேண்டும். மேல் முறையீடு, உச்சநீதிமன்றம் என இழுத்தடிக்கும் நிலையே இருக்கக் கூடாது. அப்படி இருந்தால்தான் இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பயம் இருக்கும்.

இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களை மீடியாக்களும் நன்கு பிரபலப்படுத்தவேண்டும். அவன் முகத்தையும், அவன் குடும்பத்தார் முகத்தையும் நாடு முழுக்கத் தெரியப்படுத்தவேண்டும். அவமானத்தால் வெளியே தலைகாட்டாது இருக்குமாறு செய்யவேண்டும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள்தான் இந்தக் கயவர்களை யோசிக்க வைக்கும்.

(கட்டுரையாளர்
‘இந்த மாத சிநேகிதி’ ஆசிரியர்)